ஹனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘ஹனுமன் ஒரு காட்டுவாசி. அவர் ஒரு தலித். ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர். அவரைப்போல வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். ராம பக்தர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள்’ என்றார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. ’சாதி ரீதியாக, தெய்வங்களையும் பாஜக பிரித்துவிட்டது’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ராஜஸ்தான் மாநில சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா, யோகி ஆதித்யா நாத்தின் பேச்சு ஹனுமன் பக்தர்களை காயப்படுத்திவிட்டதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.
இந்நிலையில், தேசிய பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய், ஹனுமன் பழங்குடியி னத்தைச் சேர்ந்தவர்தான், அவர் தலித் அல்ல என்று தெரிவித்திருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
முலாயம் சிங் யாதவின் தம்பி சிவபால்சிங் பிரகதிசீல் சமாஜ்வாடி (லோகியா) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் வாரணாசி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஹரிஷ் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை கொடுத்துள்ளார். மனுவில் ஹனுமனின் தந்தை மகராஜ் கேசரி, தாயார் அஞ்சனா தேவி, பிறப்பிடம் வாரணாசி சங்கத் மோச்சன் கோவில், வயது அழிவில்லாதது, பிறந்த வருடம் எல்லை இல்லாதது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒரு வாரத்துக்குள் ஹனுமன் குறித்த சாதி சான்றிதழை தராவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.