ஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு

ஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு
ஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு
Published on

தங்களின் எல்லா உணவகங்களும் ஹலால் உணவுகளையே வழங்குவதாக மெக்டோனால்ட் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் உணவில் மதம் இருக்கிறது தானே என ட்விட்டர் வாசிகள் பலரும் மெக்டோனால்ட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உணவுக்காக உயிரினங்களை வெட்டும்போது இஸ்லாமியர்கள் மத சடங்கு முறைகளை கடைபிடிப்பது வழக்கம். அதனை ஹலால் என்றழைக்கின்றனர். அப்படி மத சடங்கு முறைக்கு பின் அறுக்கப்பட்ட உயிரினங்களை தான் அவர்கள் உணவாக எடுத்துக் கொள்வார்கள். மத சடங்கு முறைகள் கடைபிடிக்காத உணவுகளை அவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதனால் பெரும்பாலான கடைகள் ஹலால் உணவுகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே பிரபல உணவு நிறுவமான மெக்டோனால்ட் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டர் வாசி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது, இந்தியாவில் உள்ள மெக்டோனால்ட் உணவகம் ஹலால் சான்றிதழ்கள் உடையவைகளாக இருக்கின்றனவா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த மெக்டோனால்ட், தங்களின் அனைத்து உணவங்களிலும் வழங்கப்படும் உணவுகள் மிக தரம் வாய்ந்த உணவுகள் என தெரிவித்தது. அத்துடன், இந்தியாவில் உள்ள அனைத்து மெக்டோனால்ட் உணவகங்களிலும் ஹலால் சான்றிதழ்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட உணவக மேலாளரிடம் நீங்கள் அதுதொடர்பான சான்றிதழ்களை காண்பிக்கச் சொல்லி சரிபார்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இதனையடுத்து மெக்டோனால்ட்டிற்கு எதிராக பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். #BoycottMcDonalds என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இல்லாத இந்தியாவில் மெக்டோனால்ட் உணவங்கள் ஹலால் உணவை வழங்கி வருவதாக கூறும் ட்விட்டர்வாசிகள், அப்படியென்றால் உணவுக்கு மதம் இருக்கிறது தானே எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில், இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்து கொடுத்ததால் ஆர்டரை கேன்சல் செய்வதாக ஒருவர் கூறியதற்கு உணவுக்கு மதமில்லை என சொமாட்டோ பதில் அளித்திருந்தது. அப்போது உணவுக்கு மதமில்லை எனப் பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் ஹலால் உணவை, மதப் பிரச்னையோடு சம்பந்தப்படுத்தி ட்விட்டர் வாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com