நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து சில ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள அரசு, தனியார் இணையதளங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கினர்.
குறிப்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் மட்டும் 50க்கும் அதிகமான இணையதளங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். டிராகன்ஃபோர்ஸ்மலேசியா என்ற பெயரில் இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள், “உங்களுக்கு உங்கள் மதம்! எனக்கு என் மதம்!” என ஆடியோ மற்றும் வாசகங்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் தானே காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் "முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேளுங்கள்" என்ற செய்தியையும் ஹேக்கர்கள் அந்த தளத்தில் வெளியிட்டுள்ளனர். "ஹலோ இந்திய அரசு, அனைவருக்கும் வணக்கம். நீங்கள் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய மதம் குறித்து மீண்டும் மீண்டும் பிரச்னை செய்கிறீர்கள். உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களிடம் விரைந்து மன்னிப்புக் கேளுங்கள்!!எங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹேக்கர்களிடம் இருந்து தளத்தை மீட்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். “தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். தானே சைபர் கிரைம் குழு அதைச் செய்து வருகிறது” என்று தெரிவித்தனர்.