“அம்ருதா இனி எங்களின் மகள்” - கொலையான ப்ரனய் பெற்றோர்கள் உருக்கம்
தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவி அம்ருதாவின் முன்னே காதல் கணவன் ப்ரனய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெவ்வேறு சமூகத்தை இந்தத் தம்பதிகள் பெற்றோர்களின் கடும் எதிர்ப்புக்கு பின் திருமணம் செய்தவர்கள். 3 மாத கர்ப்பிணியான அம்ருதாவை வழக்காமான பரிசோதனைக்காக நெல்கொண்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது கடந்த செப்டம்பர் 14ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தொடக்கத்தில் இருந்தே ப்ரனய் - அம்ருதா தம்பதியினரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் தான் கொலை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. தனது தந்தையும், டிஆர்எஸ் முன்னாள் எம்.எல்.ஏவும் சேர்ந்து இந்தக் கொலையை செய்திருப்பார்கள் என அம்ருதாவும் கூறியுள்ளார். அதேபோல், ப்ரனய்யை கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாயை மாருதி ராவ் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலையை ஆணவப் படுகொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ப்ரனய் வீடு உள்ள மிர்யலகுடா கிராமமே சோகத்தில் மூழ்கி இருந்தது. ப்ரனய்யை இன்று அவரது கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்தார்கள். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். சிலர் ப்ரனய்க்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினார்கள். தற்போது ப்ரனய் வீட்டில்தான் அம்ருதா உள்ளார். வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
ப்ரனய் தாயார் ஹேமலதா தி நியூஸ் மினிட்டிம் பேசுகையில், “நாங்கள் அம்ருதாவை நன்றாக பார்த்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் அவளை நாங்கள் விட்டுவிட முடியாது. எங்களுடன் இருக்கவே அம்ருதா விரும்புகிறார். நாங்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் அவள் எங்கே செல்வாள்? அம்ருதாவையும், அவளது குழந்தையும் நாங்கள் கவனித்து கொள்வோம். மகன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் நீதி கிடைக்கவும் சட்டபூர்வமாக தொடர்ந்து போராடுவோம்.
எங்களுக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக போலீசார் கூறினார்கள். சந்தேகப்படும் படி ஏதேனும் நடந்தால் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார்கள். எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. அடுத்த என்ன ஆகும் என பதட்டம் இருக்கிறது. இருப்பினும் அம்ருதாவை நாங்கள் விட்டுவிட மாட்டோம். அவள் எங்களுடனே இருப்பார்” என்று கூறினார்.
ப்ரனய் தந்தை பாலகிருஷ்ணன் கூறுகையில், “எனக்கு இரண்டு மகன்கள். அம்ருதாவை என்னுடைய சொந்த மகளாகவே கருதுகிறேன். எங்கள் வீட்டிற்கு முதலில் வந்த போது, அவள் மிகவும் அப்பாவியாக இருந்தார். எங்கள் வீட்டில் அவள் தங்குவதற்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அவள் எங்களுடனே தங்குவாள். அவளை என்னுடைய சொந்த மகளாகவே தத்தெடுத்து கொண்டேன்” என்றார்.
இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டளர் விமலக்கா கலந்து கொண்டு ப்ரனய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். விமலக்கா பேசுகையில், “இது மனித தன்மையற்ற செயல். இருவரும் காதலின் அழகிய சின்னமாக இருந்தார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக கொடூரமான கொலையின் மூலம் பிரித்திருக்கிறார்கள். இது சாதியின் மனித தன்மையற்ற செயலை காட்டுகிறது. இந்த விவகாரத்தில், நாம் அனைவரும் கண்டிப்பாக இணைந்து போராட வேண்டும்” என்றார்.
இந்த விவகாரத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், மாமா சரவண் குமார் உள்ளிட்ட சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது, ‘என்னுடைய மகளை விட ஜாதியின் கௌரவம்தான் முக்கியம்’ என மாருதி ராவ் போலீசிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.