வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா பிறந்தநாள்!  

வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா பிறந்தநாள்!  
வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா  பிறந்தநாள்!  
Published on

அன்னை என்றாலே அன்பும், அரவணைப்பும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர், இதனாலே அவர் அன்னை தெரசா என அழைக்கப்படுகிறார். பத்மஸ்ரீ விருது, அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரான அவர் 1910 ஆகஸ்ட் 26 ஆம் தேதி யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் நிகோலா பொயாஜியூ - டிரானி பெர்னாய் என்ற தம்பதிக்கு இளைய மகளாய் பிறந்தார். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். தம் 12-ஆம் வயதில்‘சமூகச் சேவை’செய்வதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். 

1923-ஆம் ஆண்டு ‘Sodality of Children of Mary’என்ற பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கின்ற பெண்களுக்கான சமுதாய இயக்கத்தில் சேர்ந்தார். தாயின் அனுமதியோடு சேவையில் ஈடுபட தொடங்கினார். இராணுவத்தில் பணியாற்றி வந்த தனது அண்ணனுக்கு இதை குறித்து கடிதம் எழுதினார். அதற்கு அவருடைய அண்ணன் ‘கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாக “நீ 2 மில்லியன் வீரர்களை ஆளும் மன்னனுக்காக சேவை செய்கிறாய். நான் உலகை ஆளும் கடவுளுக்காக சேவை செய்யப்போகிறேன்” என்று அண்ணனின் மனம் நோகாமல் பதிலளித்தார். தனது 18 வயதில் குடும்பத்தை பிரிந்து மக்களின் சேவைக்காக வாழ்ந்து வந்தார். 

கொல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசாவுக்கு தென்பட்ட மக்களின் வறுமை, ஏழைத் தொழிலாளர்களின் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பசியால் வாடியிருக்கும் குழந்தைகள் முகம், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள் ஆகியவைகள் அவரது மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பணிக்கு காலியிடங்கள் இருந்தன. தெரேசாவின் ஆர்வத்தால் அந்த பாடங்களுக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டு பாடம் சொல்லி கொடுக்க தொடங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு பல நேரங்களில் அன்பான ஆசிரியையாகவும், நேரத்திற்கேற்ப கண்டிப்பான ஆசிரியையாகவும் மாறி விடுவார். 

ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், அனாதை குழந்தைகளுக்காகவும், தொழுநோயாளிகளுக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் தனது முழுநேரத்தையும் அர்பணித்தார். தெரசாவின் ஒவ்வொரு வெற்றிக்கான பின்னணியில் பல்வேறு அவமானங்கள் மறைந்துள்ளன. அதனை மறைத்து, மறந்து தன் இனிமையான புன்சிரிப்பால், அன்பால் அனைவரையும் கட்டிப்போடுவார். 

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்: வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்பதே அவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள். இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற அவர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பூவுலகை விட்டு மறைந்தார். இன்று அவருடைய 109 ஆவது பிறந்த நாள். அவர் மறைந்தாலும், அவருடைய சேவைக்கான புகழ் என்றும் மறையாமல் இப்போதும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com