உரி தாக்குதலை தொடர்ந்து மூன்று முறை இந்திய வீரர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை தகர்த்துள்ளனர். இரண்டு முறை நடந்த தாக்குதல் பற்றி என்னால் சொல்ல முடியும். ஆனால் மூன்றாவது பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. உரி தாக்குதலை தொடர்ந்து ஒருமுறையும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது முறையும் பதிலடி தாக்குதல் கொடுத்துள்ளோம். மூன்றாவது முறையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல் பற்றி நான் வெளியே சொல்ல மாட்டேன்’’ எனப் பேசினார்.
முன்னதாக, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.
ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து விமானப் படையினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகின. இதனிடையே விமானப் படை தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.