கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குறைந்தது 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரந்தீப் குலேரியா, நம் நாட்டில் போடக்கூடிய கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டுமே சம அளவு செயல்திறனையும் பாதுகாப்பையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தடுப்பூசிகள் உற்பத்தி திறனை கருத்தில் கொண்டே வயது வாரியாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவற்றை செலுத்திக்கொண்டிருப்பதாகவும் ஒரே நேரத்தில் அனைத்து தரப்பினருக்கும் செலுத்துவது சாத்தியமல்ல என்றும் குலேரியா தெரிவித்தார்.
வெளிநாடுகள் பலவும் கூட இதே முறையைத்தான் பின்பற்றி வருவதாகவும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார். பொது மக்கள் அலட்சியமாக இருந்தது தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்