'கராச்சி' என்கிற பெயர் கொண்ட ஸ்வீட் கடையால் மகாராஷ்டிராவில் திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. சிவசேனா தொண்டர் ஏற்படுத்திய சர்ச்சைக்கு சிவசேனா, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்வினையாற்றியுள்ளன.
மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் தொண்டரால் சமீபத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. மும்பை புறநகர் பாந்த்ராவில், ஒரு இனிப்பு கடையின் பெயர் `கராச்சி' (பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரம்) என்று இருந்தது. சிவசேனாவின் நிதின் நந்த்கோன்கர், தான் பகிர்ந்த ஃபேஸ்புக் வீடியோவில், அந்தக் கடையில் நின்றுகொண்டு, `கராச்சி ஸ்வீட்ஸ்' உரிமையாளரிடம் கடையின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் "மும்பையில் கராச்சி என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம். கராச்சி என்ற பெயரில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. பாய் தூஜில் எங்கள் ஜவான் இறந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு" என்று கூறியிருந்தார். மேலும் ``கடையின் பெயரை உங்கள் தாத்தா அல்லது தந்தை பெயரை இடுங்கள். கடைக்கு மறுபெயரிட அவகாசம் தருகிறோம்" என்றதுடன் ஃபேஸ்புக்கில் தனது பதிவில், கராச்சி என்ற வார்த்தையை அனைத்து அடையாள அட்டைகளிலிருந்தும் 15 நாட்களில் கைவிடவேண்டும் என்றும் மிரட்டல் தொனியில் அந்தக் கடை உரிமையாளருக்கு சொல்லியிருந்தார்.
இந்த வீடியோ சிறிதுநேரத்தில் வைரலானது. இதையடுத்து, சிவசேனா இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.`கடந்த 60 ஆண்டுகளாக கராச்சி பேக்கரிகள் மற்றும் கராச்சி ஸ்வீட் கடைகள் மும்பையில் இயங்கி வருகின்றன. அவர்களுக்கும், பாகிஸ்தானுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது அவர்களின் பெயர்களை மாற்றுமாறு கேட்பதில் அர்த்தமில்லை. அவர்களின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை சிவசேனாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல" என்று சிவசேனா மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
இதற்கிடையே, இது தொடர்பாக மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசியுள்ளார். ``நாங்கள் 'அகந்த் பாரத்' (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், ஒருநாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியும் தனது கண்டனத்தை சிவசேனா தொண்டருக்கு பதிவு செய்தது. இந்தச் சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு காவல்துறையினரை நாடியுள்ளனர் ஆம் ஆத்மி தொண்டர்கள். தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கராச்சி பேக்கரியின் தலைமையகம் 1953-இல் தொடங்கியது, ஹைதராபாத்தில் உள்ள மொய்சாம் ஜாஹி சந்தையில் அமைந்துள்ளது. இது காஞ்சந்த் ராம்னானி ஜி என்பவரால் நிறுவப்பட்டது மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான பேக்கரிகளில் ஒன்றாக உள்ளது. இது, பழ பிஸ்கட், தில் குஷ் மற்றும் பிளம் கேக் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. தற்போதைய நிலவரப்படி, கராச்சி பேக்கரியில் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய ஐந்து நகரங்களில் விற்பனை நிலையங்கள் உள்ளன.