தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்களை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் 48ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில அரசுடன் போக்குவரத்து கழகத்தை இணைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும், ஓய்வு பெறும் வயது வரம்பை 60ஆக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மாநில போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசானை நடத்தினார். இதன்பின்னர் சனிக்கிழமை மாலை வரை பணிக்கு திரும்பிய ஊழியர்களை தவிர இதர ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டார். அதன்படி 48 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் சந்திரசேகரராவின் இந்த அதிரடி முடிவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தெலங்கானாவில் மாநில போக்குவரத்து ஊழியர்கள் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்களின் அமைப்பின் தலைவர் ஒருவர்,“எங்களின் போராட்டத்தை காரணமாக காட்டி மாநில போக்குவரத்து கழக்கத்தை தனியார் மயமாக்க முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். எங்கள் போராட்டம் மீது அவர் தேவையில்லாமல் பழிப் போடுகிறார். அவரின் நெருக்கடிக்கு நாங்கள் யாரும் அடிபணிய போவதில்லை” எனக் கூறியுள்ளார்.