திருமண பத்திரிகையில் மோடிக்கு ஓட்டு கேட்டு வாசகம் அச்சிடப்பட்டதால், திருமண வீட்டாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
தங்களது திருமண அழைப்பிதழ்களில் வித்தியாசம் காட்ட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக், சாக்லெட் இன்னும் பல வித்தியாசமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் அச்சாகின்றன. இந்நிலையில் நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்டு ஒருவர் திருமண பத்திரிகை அடித்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிகோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதிஷ் சந்திரா சோஷி. இவர் அப்பகுதியில் கோசாலை நடத்தி வருகிறார். தனது மகன் ஜீவனின் திருமண பத்திரிகையில் வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமான வாசகத்தை அச்சிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார். அதில் ''திருமணத்துக்கு எந்த அன்பளிப்பும் வேண்டாம். அதற்கு பதிலாக ஏப்ரல்11ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்'' என்று குறிப்பிடபட்டிருந்தது. இந்த பத்திரிகை குறித்து மாவட்ட தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை கவனத்தில் எடுத்த மாவட்ட தேர்தல் ஆணையர், ஜெகதிஷ் சந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் பத்திரிகையில் வாக்கு கேட்டது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேரில் ஆஜரான ஜெகதிஷ் சந்திரா, பத்திரிகையில் கொடுக்கப்பட்ட வாசகங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் ''நாங்கள் சாதாரண ஆட்கள் தான். இந்த பத்திரிகையின் வாசகத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை'' என்று தெரிவித்தார்.
உத்தரகாண்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் நடைபெறவுள்ள நிலையில் ஜிவாவின் திருமணம் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.