கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? - பதற்றம் அடைய வேண்டாமென்று முதலமைச்சர் வேண்டுகோள்
நிபா வைரஸ் குறித்து யாரும் பதற்றம் அடைய வேண்டாமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரள மாநிலத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்தக்காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதியான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் திரிச்சூரைச் சேர்ந்த 8 பேர் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரள அரசு நிபா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் செய்தி குறித்து கருத்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது குறித்து யாரும் பயப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள். சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் அணில் மற்றும் வவ்வால்கள் மூலம் பரவும் என்றும், எனவே அணில்கள், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.