“உங்கள் வேலையை பாருங்கள்” - பிபின் ராவத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

“உங்கள் வேலையை பாருங்கள்” - பிபின் ராவத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
“உங்கள் வேலையை பாருங்கள்” - பிபின் ராவத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
Published on

ராணுவ அதிகாரிகள் தங்கள் வேலையை எப்படி செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்லித்தருவதில்லை என ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

குரியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், தலைவர்‌கள் கூட்டத்திலிருந்துதான் உருவாகிறார்கள் என்றும், எனினும் மக்களை, பொருத்தமற்ற திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது எனக் கூறினார். நாட்டில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், மக்களை வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுவது நல்ல தலைமையாகாது என்றார்.

இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் தங்கள் வேலையை எப்படி செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்லித்தருவதில்லை என ப.சிதம்பரம் சாடியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய ப.சிதம்பரம், “டிஜிபி மற்றும் ராணுவ ஜெனரல் அரசாங்கத்திற்கு ஆதரவு தரச்சொல்லி கேட்கிறார்கள். இது அவமானம். ஜெனரல் ராவத்திடம் முறையிடுகிறேன். நீங்கள் ஒரு ராணுவத் தளபதி. உங்கள் வேலையை பாருங்கள். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது உங்கள் வேலையல்ல.

அதேபோல், நீங்கள் போரில் எப்படி சண்டையிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி நியாயமற்ற ஒன்று. அரசியலமைப்புக்கு எதிரானது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நமது அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்கிறது. எனவே அவற்றை முற்றிலும் நீக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்திருந்தால் அவர்கள் அரசியலமைப்பை திருத்தியிருப்பார்கள். பாஜக அரசால் அரசியலமைப்பை திருத்த முடியவில்லை என்பதால் அவர்கள் பின்பக்க கதவு வழியாக அவற்றை நிறைவேற்றுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com