தன் வாழ்நாள் முழுவதும் மின்சாரத்தை பயன்படுத்தால் 79 வயது மூதாட்டி ஒருவர் புனேவில் வாழ்ந்து வருகிறார்.
தாய் உள்ளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் மூதாட்டி புனேவின் புத்வார் பெத் பகுதியில் வசித்து வருகிறார். 79 வயது நிரம்பிய அவரது பெயர் ஹேமா சேன். முன்னாள் பேராசிரியர் ஆன இவர், தாவரவியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். புனேவின் சாவித்திரி பாய் புலே பல்கலைக்கழகத்திலும், புனே கார்வேர் கல்லூரியிலும் பல ஆண்டுகள் பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். இவர் தனது வாழ்நாளில் மின்சாரத்தை உபயோகப்படுத்தாமலே வாழ்ந்து வருகிறார். சிறிய குடிசை வீட்டில் எளிமையாக வாழும் இவர், தான் மின்சாரம் பயன்படுத்தாதற்காக காரணத்தைக் கூறி மெய்சிலிர்க்க வைக்கிறார்.
அவர் கூறும்போது, “உணவு, தங்குமிடம் மற்றும் உடைகள் இவையெல்லாம் அடிப்படை தேவைகள். ஆனால் ஒரு காலத்தில் மின்சாரம் என்பது இல்லை. அது பின்னர் தான் வந்தது. எனவே அது இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் வாழும் இந்த இடத்தில் நாய், பூனைகள், பறவைகள் உட்பட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றனர். அவைகளுக்கு பின் தான் நான் இந்த இடத்தில் வசிக்கிறேன். எனவே இது என்னுடைய இடம் மட்டுமல்ல. நான் வாழ்நாளில் மின்சாரத்தை பயன்படுத்தியதே இல்லை. மின்சாரம் இன்றி எப்படி வாழ்கிறீர்கள் ? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன் மின்சாரத்துடன் எப்படி வாழ்கிறீர்கள் ?
இங்கிருக்கும் பறவைகள் எனது நண்பர்கள். நான் வீட்டில் வேலை செய்யும் போதெல்லாம் அவை வந்துவிடும். சிலர் என்னிடம் இந்த வீட்டை விற்றுவிடுங்கள், நல்ல விலைக்கு போகும் என்கிறார்கள். நான் இதை பணத்திற்காக விற்றுவிட்டால் இங்கிருக்கும் பறவைகள் மற்றும் மரங்களை அதன்பின் யார் பார்த்துக்கொள்வார்கள் ? நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. சிலர் என்னை பைத்தியம் என்கிறார்கள். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல விரும்பவில்லை. இது எனது வாழ்க்கை, அதை நான் எனக்குப் பிடித்தது போல வாழ்கிறேன்” என்று தெரிவித்தார்.
தாயுள்ளம் கொண்ட அந்த மூதாட்டி வசிக்கும் வீடு சிறியதாக இருந்தாலும், அங்கு காலை என்பது பறவைகளின் சங்கீதத்துடன் விடிகிறது. மாலை என்பது மயக்கமூட்டும் இயற்கை விளக்குடன் முடிகிறது. இந்த மூதாட்டி தாவரவியல் துறை சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவருக்கு தெரியாத பறவைகள் மற்றும் மரங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு படித்துள்ளார்.