“பள்ளிக்கூடமே என் மகளை பாலியல் வன்முறை செய்து கொன்றது நியாயமா?” - பெற்றோர் வேதனை

“பள்ளிக்கூடமே என் மகளை பாலியல் வன்முறை செய்து கொன்றது நியாயமா?” - பெற்றோர் வேதனை
“பள்ளிக்கூடமே என் மகளை பாலியல் வன்முறை செய்து கொன்றது நியாயமா?” - பெற்றோர் வேதனை
Published on

தனது மகளின் மரணத்திற்காக நியாயம் கேட்டு ஒரு தம்பதி மூன்று ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் போராடி வருகின்றனர்.

“ஒவ்வொரு பெற்றோர்களும் பள்ளிக்கூடங்கள்தான் நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடம் என நினைக்கிறார்கள். ஆனால் மனிதாபிமானமற்ற முறையில் ஒரு மாணவியை கல்வி கற்றுத் தருகிறோம் என்ற போர்வையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று மறைப்பது எந்தவிதத்தில் நியாயம்?” என முகத்தில் அறைவதைப்போல கேள்வி எழுப்புகிறார் சுகாலி ராஜூ நாயக். இந்தக் கேள்வியை இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக எழுப்பி வருகிறார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகாலி ராஜூ நாயக். இவரது மனைவி பார்வதி தேவி. இந்தத் தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள். பெயர்; கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அழகாக நகர்ந்தது அவளது பள்ளி வாழ்க்கை. 

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. தனியார் பள்ளியில் படித்து வந்த கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காலை 11 மணிக்கு தெரிய வந்தது. பள்ளி நிர்வாகம் உடனே கீதாவின் பெற்றோருக்கு போன் மூலம் ‘உங்களின் மகள் உடல் செளகர்யம் இல்லாமல் இருக்கிறாள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம்..உடனே வாருங்கள்’ என்று கூறியுள்ளது. அடித்து பிடித்து போய் பார்த்தால் பள்ளியில் இவர்களது மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதை பார்த்ததும் பெற்றோர்களுக்கு வயிற்றில் பயம் பந்தை போல சுற்றியது. அதற்கு காரணம் அதற்கு முந்தைய நாளே இவர்களது மகள் சொன்ன வார்த்தைதான்.  பள்ளியின் தாளாளரின் மகன்கள் கீதாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக அவர் முதல்நாள் தொலைபேசியில் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.  விடிந்தால் விடை தேடலாம் என நினைத்த இந்தத் தம்பதிக்கு மகளின் மரணச் செய்திதான் கிடைத்தது. 

பள்ளிக்குச் சென்று பார்த்த இவர்களுக்கு எதுவும் அங்கே முறையாக நடந்ததைபோல தெரியவில்லை. பள்ளி நிர்வாகம் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொன்னது.  ஆனால் இந்தத் தம்பதி தனது மகள் தற்கொலை செய்யவில்லை. அவள் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் கொடுத்தனர். இவர்களின் சந்தேகத்தின் படியே மாணவி கீதா இறப்பதற்கு முன்னாள் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகி உள்ளார் என பிரேத பரிசோதனை ஆய்வு வந்துள்ளது. ஆகவே பெற்றோரின் புகாரை ஏற்று தாளாளர் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த காவல்துறை சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டதாக கீதாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தம்பதி எழுப்பும் புகார்கள் சம்பந்தமான கட்டுரையை ‘தி நியூஸ் மினிட்’ மிக விரிவாக வெளியிட்டுள்ளது.

மேலும் பள்ளி நிர்வாகம் முறையாக சிசிடிவி காட்சிகளை தரவில்லை என்றும் அதற்கான ஆதாரங்களை அவர்கள் மறைத்து வருகின்றனர் என்றும் இப்பெற்றோர் இந்தப் பேட்டியில் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலமே அதிரும் படியான போராட்டங்கள் வெடித்ததால் 2017ல் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரித்து அறிக்கை தரும்படி கர்னூல் ஆட்சியர் ஆணையிட்டிருந்தார். இவரது அறிவுறுத்தல் பேரில் நடந்த விசாரணையில் மாணவியின் உடலில் உள்ள காயங்கள் கண்டறியப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் தரும் தகவலில் முரண்பாடுகள் அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆக, பெற்றோரின் சந்தேகத்திற்கு ஏற்ப விசாரணையின் அறிக்கையும் இருந்தது மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்களை மீண்டும் கிளப்பியது.

இந்நிலையில் இந்தப் பெற்றோர் சமீபத்தில் பவண் கல்யாணை சந்தித்து இந்த வழக்கு நியாயமாக நடக்க உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே இந்தப் பிரச்னை மீண்டும் பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது. அதையொட்டி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இந்தப் பெற்றோரின் மூன்றாண்டு கால போராட்டத்திற்கு தற்போது ஒரு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com