“கோத்ராவில் நடந்ததை திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்” - கர்நாடக அமைச்சர்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மை மக்கள் அமைதியிழந்தால் கோத்ரா போன்ற நிலை வரும் என்று கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் போராட்டங்கள் அமைதியான வழியிலே நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையில் முடிந்துவிடுகின்றன.
கர்நாடகாவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடகா பற்றி எரியும் என்று காங்கிரஸ் கட்சியின் யு.டி.காதெர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் காதெர் கருத்துக்கு பாஜக அமைச்சர் சி.டி.ரவி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த மனநிலைதான் கோத்ராவில் ரயில்களை எரித்தது. இந்த மனநிலையை உடையவர்கள் தான் கரசேவகர்களை உயிருடன் எரித்துக் கொன்றார்கள். அது நமக்கு நன்றாக தெரியும்.
ஏதேனும் அதுபோல் நடந்தால், கோத்ரா ரயில் எரிப்புக்கு பிந்தைய எழுச்சியால் என்ன நடந்தது என்பது, காதெருக்கும் நன்றாக தெரியும். அப்படி அவர் மறந்திருந்தால், திரும்பவம் அவர் நினைவில் கொள்ளட்டும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் இங்கு அமைதியாக இருக்கிறார்கள். நீங்கள்தான் எல்லா இடங்களிலும் நெருப்பினை பற்ற வைக்கிறீர்கள். பொறுமையிழந்தால் என்ன நடக்கும் என்பதை திரும்ப பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களுடைய அமைதி ஒன்றும், வலிமையற்றது அல்ல. மக்களின் பொதுச் சொத்துக்களை நீங்கள் எப்படி சேதப்படுத்தி வருகிறீர்கள், மாநிலத்தில் எப்படி பதட்டத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றார் சி.டி.ரவி.