சபரிமலை பிரச்னையால் கேள்விக்குறியான டோலி பணியாளர்களின் வாழ்வாதாரம்
சபரிமலை பிரச்னையால் அங்கு டோலி தூக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதத்திற்கு முன்னர் தீர்ப்பளித்தது. இதனால் சபரிமலை நடை திறக்கப்பட்ட போது, சில பெண்கள் அங்கு சென்றனர். இதையடுத்து சபரிமலையில் பக்தர்கள் மற்றும் இந்துத்துவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சபரிமலை சென்ற பெண்கள் அனைவரும் திரும்பி அனுப்பப்பட்டனர். பக்தர்கள் போராட்டம் போலீஸுடனான மோதலாக மாறியது. இதையடுத்து சபரிமலையில் பதட்டமான சூழல் இன்று வரையிலும் மாறவில்லை.
இந்தப் பிரச்னையால் சபரிமலை சுற்றுவட்டாரத்தில் தொழில் செய்யும் பலரது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அந்த வகையில் அங்கு டோலி தூக்கும் பணியாளர்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களில் வயது முதிர்வு காரணமாக நடக்க இயலாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருப்போர் செல்வதற்கு வசதியாக டோலியில் தூக்கிச்செல்லும் பணியாளர்கள் உள்ளனர்.
பம்பாவிலிருந்து கோயில் சன்னிதானம் வரைக்கும் இவர்கள் பக்தர்களை தூக்கிச்சென்று, பக்தர் சாமி கும்மிபிட்ட பிறகு மீண்டும் பம்பாவிற்கு கொண்டுவந்து விடுவது வழக்கம். சுமார் 250க்கு மேற்பட்ட டோலிகள் அங்கு உள்ளன. அதில் ஒரு டோலிக்கு நான்கு பேர் என்ற வீதத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்கு உழைக்கின்றனர்.
இந்த டோலி உழைப்பாளிகள் தங்கள் பெயரை சபரிமலை தேவஸம் போர்டில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஒரு அடையாள அட்டை அங்கு வழங்கப்படும். பம்பாவிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்களை இவர்கள் சுமந்து செல்கின்றனர். ஒருமுறை நடைக்கு ரூ.2,200 கட்டணமாக வாங்கப்படுகிறது. இந்தத் தொகை தேவஸம் போர்டு நிர்ணயித்ததாகும்.
இதில் ரூ.200 தேவஸம் போர்டுக்கு வழங்க வேண்டும். ஒரு முழுப்பயணத்திற்கு ரூ.4,200 வசூலிக்கப்படுகிறது. இதைத் நம்பித்தான் இங்கு அந்த 2 ஆயிரம் டோலி தூக்கி பணியாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்துள்ளதால் டோலி தூக்கும் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலர் தங்கள் வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பலாமா என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்த டோலி பணியாட்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மீண்டும் பிரச்னை தீர்ந்து பழைய நிலையை அடையவில்லை என்றால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என டோலி பணியாட்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர்.