மத்திய அளவில் ஊழலை ஒழிக்க மோடி அரசு பாடுபடுவதாகவும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது நல்ல விஷயம் எனவும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்கானமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அளவில் லஞ்சம் மற்றும் ஊழல் புகார் குறித்து அரிதாகவே தாம் கேள்வி படுவதாகவும் மோடி அரசில் ஊழல் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அயராது உழைத்து கொண்டிருப்பதாகவும் ரஃபேல் ஒப்பந்த புகாரில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மோடி தலைமையிலான அரசு வலுவான பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்கு மோடியை குற்றம் சாட்டுவது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
நாம் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு முன்னர் கலாச்சார முன்னேற்றம் தேவை எனவும் கடந்த 5 வருடங்களை பார்க்கும்போது நாட்டை பற்றி கவலைப்படும் ஒரு தலைவராக மோடி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மோடிக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் எனவும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் எனவும் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.