தனது பாதுகாவலர் புகைப்படக் கலைஞரை தாக்கியதற்கு லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் விளக்கமளித்துள்ளார்.
இன்று நடைபெறும் 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக தேஜ் பிரதாப், படலிபுத்ரா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு வந்தார். அங்கு வாக்கை பதிவு செய்த பின்னர் வெளியே சென்ற அவரை, காரில் செல்லும் போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது அங்கிருந்த பிரதாப்பின் பாதுகாவலர் ஒருவர், போட்டோகிராபர் ஒருவரை தாக்கினார். இதைக்கண்ட அங்கிருந்த மற்ற ஊடகத்தினர் மற்றும் காவல்துறையினர் தடுத்தனர். அதை மீறியும் போட்டோகிராபர் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போட்டோகிராபர் தாக்கப்பட்டது தொடர்பாக தேஜ் பிரதாப் விளக்கமளித்துள்ளார். அதில், “நான் எனது வாக்கை பதிவு செய்துவிட்டு காரில் திரும்பும்போது, பத்திரிகையாளர் குழுவாக என்னை சூழ்ந்துகொண்டனர். அப்போது ராஜன் என்ற போட்டோகிராபர் எனது கார் கண்ணாடியை உடைத்தார். அது என் கார் டிரைவர் கண்ணில் காயத்தை ஏற்படுத்தியது. இது ஒரு கொலை முயற்சி ஆகும்” என்று கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவர் முன்னாள் அமைச்சராகவும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவராகவும் இருந்தவர்.