11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்!

11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்!
11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்!
Published on

டெல்லியில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அது விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. 

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? எனக் காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.


அப்போது வீட்டிற்குள்ளேயே கோயில் கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டிருந்தன. 

11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டன. அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்ததால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் என்பவரைதான். 

தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார். மோட்சத்தை அடைய தற்கொலைதான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரி டம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க போலீசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், குடும்ப சொந்தம், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

லலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார். அதில் ஆன்மா, இறப்பு, மோட்சம், சொர்க்கம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. டைரியில், கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதப்பட்டவற்றில், ‘தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது. யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை. நீங்கள் அடுத்த தீபாவளியை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2015- ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில் லலித்தின் அப்பா கூறியதை போல எழுதப்பட்டுள்ளது. அதில் ‘என்னுடன் மேலும் நான்கு ஆத்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் உங்களை முன்னேற்றினால் இந்த ஆன்மாக்கள் விடுபடும். ஹரித்துவாரில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டால் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். நான் மற்ற ஆன்மாக் களோடு அலைந்துகொண்டிருக்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வீட்டில் 10 பேர் உடல்கள் தூக்கில் தொங்கியவாறும் நாராயண் தேவியின் உடல் மட்டும் தரையில் கிடந்த நிலையிலும் மீட்கப்பட்டது. அதனால் நாராயண் தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் அனைவருமே தூக்குப் போட்டுதான் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 11 பேரும் தூக்கில் தொங்கிதான் இறந்துள்ளனர் என்கிற முடிவுக்கு போலீசார் வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சார்பில், நடத்தப்பட்ட உளவியல் உடற்கூராய்வு (psychological autopsy) அடிப்படையிலும் இது தற்கொலை தான் என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இது தற்கொலை அல்ல விபத்து என்று இப்போது கூறப்பட்டுள்ளது. இது தற்கொ லை அல்ல என்றும் மத சடங்குகள் செய்யும் போது தவறுதலாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் யாருக்கும் தங்கள் உயிரை விட விருப்பவில்லை என்றும் அந்த உளவியல் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com