“ஜாக்கிரதையாக இருங்கள்” - காதல் தம்பதியை முன்கூட்டியே எச்சரித்த போலீஸ்

“ஜாக்கிரதையாக இருங்கள்” - காதல் தம்பதியை முன்கூட்டியே எச்சரித்த போலீஸ்
“ஜாக்கிரதையாக இருங்கள்” - காதல் தம்பதியை முன்கூட்டியே எச்சரித்த போலீஸ்
Published on

தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே காதல் கணவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்த இளம் காதல் தம்பதியை முன்பே எச்சரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

நெலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகளான ப்ரனய் - அம்ருதா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். அம்ருதாவும், ப்ரனயும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் போராடி திருமணம் செய்து கொண்டனர். ப்ரனய் வீட்டார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அம்ருதா கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு பின்னர் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பெரிய அளவில் திருமண வரவேற்பு நடத்தினர். இந்த நிகழ்வுக்கு அம்ருதாவின் பெற்றோர்கள் வரவில்லை. 

இதனிடையே, கர்ப்பிணியான அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக நெலகொண்டாவில் தனியார் மருத்துவமனைக்கு ப்ரனய் அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.14) மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது தான் அம்ருதா கண் முன்னே ப்ரனய் மர்ம நபரால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கியுள்ளது. 

அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் ப்ரனய் குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே மிரட்டல் விடுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அம்ருதாவும் தனது கணவர் கொலைக்கு தனது தந்தையும், மாமாவும் தான் காரணமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். 

இந்த கொலை சம்பவம் சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் நெலகொண்டா போலீசார், ப்ரனய்க்கு கொலை மிரட்டல் இருப்பதாக ஏற்பனவே எச்சரிக்கை விடுத்ததாக கூறியது. இந்த வழக்கை விசாரித்து வரும் நெல்கொண்டா டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “அம்ருதாவின் தந்தை மேல் எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால், ஆகஸ்ட் மாதமே அந்த தம்பதியினரை நான் எச்சரித்தேன். ஜாதி ரீதியிலான இந்த விவகாரத்தில் ஏதோ நடக்கக் கூடும் என நான் சந்தேகித்தேன். அதனால், அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சில போலீஸ் அதிகாரிகள் சென்றிருந்தார்கள். அதனால், எவ்வித மோசமான சம்பவமும் அன்று நடைபெறவில்லை” என்றார்.

மேலும், “தங்களது திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுக்க, ப்ரனய் மற்றும் அம்ருதா இருவரும் மிர்யலாகுடாவில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றனர். அப்போதே, தனக்கு கொலைமிரட்டல் இருப்பதை ப்ரனய் அறியாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அம்ருதாவின் தந்தையை அழைத்தோம். அப்போது, ப்ரனாய் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரிடம் கேட்டோம். ஆனால், அப்படி தனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று மாருதி ராவ் தெரிவித்தார். தான் மிரட்டல் விடுப்பதாக தவறான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் கூறினார். மாருதி ராவ்க்கு எதிராக எவ்வித புகாரோ, மனுவோ அளிக்கப்படவில்லை. அப்படி செய்திருந்தால் பாதுகாப்பு அளித்திருப்போம்” என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், “எங்களுக்கு வந்த மிரட்டல்கள் அனைத்து பழக்கமான நபர்கள் மூலமாகவே விடுக்கப்பட்டது. அதனால், போன் கால் ரெக்கார்டிங் உள்ளிட்ட எவ்வித பதிவும் இல்லை. இருப்பினும் எங்கள் வீட்டு வளாகத்தில் மூன்று சிசிடிவி கேமிராக்கள் இருக்கின்றனர். அதனை பரிசோதனை செய்தால் சில விஷயங்கள் தெரியும்” என ப்ரனய் மாமா தெரிவிக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com