அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு ரயில்வேத் துறை எந்தவகையிலும் பொறுப்பாகாது என அந்ததுறையின் இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாகச் சென்ற ரயில் அவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விட்டுச் சென்றது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர்.
தசரா கொண்டாட்டம் நடத்தப்படுவது தொடர்பாக ரயில்வே துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை என கூறப்பட்டது. அதேபோல், ‘ரயில் அதிவேகத்துடன் வந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் ரயிலின் வேகம் குறைக்கப்படவில்லை’ என்றும் சிலர் கூறினர். ‘மக்கள் நின்ற இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தண்டவாளப்பாதையில் வளைவு உள்ளது. அதனால் ரயில் ஓட்டுநர் மக்கள் கூடியிருந்ததை கவனிக்க இயலவில்லை’ என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு ரயில்வேத் துறை எந்தவகையிலும் பொறுப்பாகாது என அந்ததுறையின் இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ரயிலை இயக்கியவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த மனோஜ் சின்ஹா, குறிப்பிட்ட இடத்தில் ரயில்வே விதிகளுக்கு உட்பட்டே ரயில் இயக்கப்பட்டுள்ளதாகவும், ரயிலை இயக்கியவர் மீது எந்தத் தவறும் இல்லை எனவும் விளக்கமளித்தார். வரும் காலங்களில் ரயில் பாதை அருகே பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவது தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மனோஜ் சின்ஹா, இது போன்ற துயரமான சம்பவங்களை அரசியலாக்குவது கூடாது என்றார்.