மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்த கும்பலை திடீர் சோதனை நடத்தி பெண்கள் ஆணையம் பிடித்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியின் திலக் நகர் பகுதியில் செயல்படும் ‘அமேஷிங் ஸ்பா’ என்ற தனியார் மசாஜ் நிலையத்தில் சட்டவிரோத பாலியல் தொழில் நடத்தப்படுவதாக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் தலைமையிலான தனிப்படையினர் அந்த ஸ்பாவிற்கு விரைந்தனர்.
அங்கு அதிரடியாக நுழைந்த அதிகாரிகள், அங்கிருந்து பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிடித்தனர். அத்துடன் ஏராளமான பயன்படுத்தப்பட்ட காண்டம்களை கைப்பற்றினர். பின்னர் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் கூறி, ஸ்பாவின் உரிமையாளருக்கு போன் செய்தனர். ஸ்பாவில் சோதனை நடக்கிறது என்ற தகவலை அறிந்ததும், உரிமையாளர் உடனே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதையடுத்து அங்கிருந்த பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் பரவியதும் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்ட அனைத்து ஸ்பாக்களும் உடனே மூடப்பட்டன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வாதி மலிவால், “2 பிரிவுகளின் மீது அந்த ஸ்பா நிலையத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஸ்பாக்களை திறக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், எப்படி இவர்கள் தைரியத்துடன் ஸ்பாக்களை திறந்து நடத்துகிறார்கள் என தெரியவில்லை. கண்டிப்பாக காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினருக்கு தெரியாமல் இவற்றை நடத்த வாய்ப்பில்லை. பாலியல் தொழில் செய்வது என்பதுடன், இதன்மூலம் பெருமளவில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது” என்றார்.