‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்

‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்
‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவினரை குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த மாணவியின் பெற்றோர் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். மாணவி மரணம் தொடர்பாக அவரது தாயார் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் இதோ:

கேள்வி: மாணவியின் மரணம் தொடர்பாக உங்களுக்கு எப்போது தெரிய வந்தது?

தாயாரின் பதில்: இதுவரை எப்போது அவர் மரணமடைந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஜூலை 13 ஆம் தேதி காலையில் பள்ளியின் தாளாளர் எனக்கு போன் செய்து “உங்கள் மகள் மாடியில் இருந்து குதித்து விட்டார்” என்று தெரிவித்தார். உடனே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறினார். பதறிப்போய் பல கேள்விகளை கேட்டேன். அவள் அருகிலேயே இருங்கள் எனக் கூறிவிட்டு, மருத்துவமனைக்கு ஓடினோம். அங்கு போய் பார்த்தால் பள்ளி தரப்பில் ஒருவர் கூட இல்லை. என் மகளை பற்றி விசாரித்தபோது உங்கள் மகள் இறந்துதான் இங்கு கொண்டுவரப்பட்டார் என்று மருத்துவர் தெரிவித்தார். அப்போதுதான் இது “திட்டமிட்ட கொலை” என்று சந்தேகம் எழுந்தது.

இறந்த மகளின் முகத்தையாவது காட்டுங்கள் என்று கேட்டதற்கு உடல் பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவள் உடல் உப்பத் துவங்கியிருந்தது. கைகளை இறுக்கமாக மூடியிருந்தாள். மாடியில் இருந்து தற்கொலைக்கு முயலும்போது கைகளை விரிக்கத்தானே செய்வார்கள். இது எங்களுக்கு பெரிய சந்தேகத்தை கிளப்பியது. உள்ளாடை வெளியே தெரியும்படி தான் பேண்ட் இருந்தது. உடலிலும் பல காயங்கள் இருந்தன. உடனே பள்ளிக்கு சென்ற போது பலர் கும்பலாக அங்கு ஏற்கனவே குவிந்திருந்தனர். போலீசும் இருந்தனர். இந்த நிமிடம் மகளின் மரணத்திற்கு பள்ளி தரப்பில் ஒருவர் கூட ஆறுதல் கூறவில்லை. நாங்கள் கேட்கும் முன்பே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள், எதுவும் சொல்லாமல் இருந்தது அவர்கள் மீது “ஏதோ” தவறு இருப்பதை தானே உணர்த்துகிறது. மேலும் என் மகளின் ரத்தக்கறைகள் அந்த கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம்.

காவல்துறை தரப்பில் சிலரை கைது செய்து விட்டோம் என்று சில புகைப்படங்களை காட்டினார்கள். ஆனால் அது பச்சைப் பொய்.! அவர்களை எல்லாம் 17 ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தபின் தான் கைது செய்தனர். அப்படித்தான் ஊடகங்களிடம் தெரிவித்தனர். ஒரே ஆளை 2 முறையா காவல்துறை கைது செய்தது? இரவு 10.30 மணிக்கு அவள் மாடியில் இருந்து குதித்ததாக சிலர் சொன்னார்கள். அது ஒன்றும் நள்ளிரவில்லையே! எங்களுக்கு உடனடியாக தகவலை சொல்லி இருக்கலாமே! அல்லது அடுத்த நாளாவது எங்களிடம் முழுவதையும் விளக்கி இருக்கலாமே! எதையுமே யாரும் செய்யவில்லை., அவளது தோழிகள் சிலருக்கு உண்மை தெரிந்தாலும் பயந்து அதை பற்றி பேச மறுக்கிறார்கள்.

கேள்வி: மாணவி மரணமடைவதற்கு முந்தைய தினம் எடுக்கப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் சில வெளியானதே., முன்னரே அதை பார்த்தீர்களா?

தாயாரின் பதில்: இல்லை., எங்களைப் பார்க்க விடவில்லை. பள்ளியின் நுழைவுவாயில் முதல் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் பள்ளி அது. ஆனால் எந்த பதிவையும் அவர்கள் காட்டவில்லை. அனைத்து தகவல்களையும் முன்னுக்கு பின் முரணாகவே இருந்தது.

கேள்வி: போலீஸ் விசாரணை நடைபெற்று வரும் போது, அரசு அதிகாரிகளும் ஒருபக்கம் விசாரணை நடத்தியபோதிலும் வன்முறை எப்படி நடந்தது?

தாயாரின் பதில்: எந்த அரசு அதிகாரி எங்களை பார்த்தார்? கலெக்டர், போலீஸ், பள்ளி நிர்வாகம் மூவரும் ஒன்றாக அமர்ந்து, எங்களை அழைத்து “இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று விளக்கியிருந்தால் “ஒரு மணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை இது”. ஆனால் அனைத்தும் மறைவாகவே நடந்தது. 18 நாள் ஆகிவிட்டது. ஒரு உண்மையாவது வெளியாகி இருக்கிறதா?

கேள்வி: மாணவி எழுதியதாக ஒரு கடிதமும் வெளியானது அல்லவா? அது உண்மையா?

தாயாரின் பதில்: அது உண்மையல்ல. அது எனது மகளின் கையெழுத்தும் அல்ல. அதை எனது மகளிடமிருந்து கைப்பற்றியதாக சொன்னார்கள். அது உண்மையென்றால் முதல் நாள் நாங்கள் போய் கேட்டபோது “உன் மகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துவிட்டாள்” என்று கடிதத்தை காட்டி இருக்கலாமே., 14 ஆம் தேதிதான் என்னிடமே காண்பித்தார்கள். அதுவும் மொபைலில் போட்டாவாகத் தான். அது திட்டமிட்டு யோசித்து யோசித்து எழுதப்பட்ட கடிதம். அது என் மகள் கையெழுத்தே கிடையாது. அந்த கடிதத்தில் ஆசிரியர்கள் தந்த அழுத்தத்தால் அவள் தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது பற்றி முன்னரே ஒரு வார்த்தை கூட என் மகள் என்னிடம் கூறவில்லை. மரணத்திற்கு 3 நாள் முன்பு கூட என் மகள் மிக இயல்பாகவே என்னிடம் பேசினாள்

கேள்வி: சிபிசிஐடி வசம் வழக்கு சென்றிருக்கிறதே., அதை எப்படி பார்க்கிறீர்கள்?

தாயாரின் பதில்: சிபிசிஐடியை நான் கடவுளாகப் பார்க்கிறேன். ஒரு தாயின் உணர்வை புரிந்து, யாருக்கும் செவி சாய்க்காமல், உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என்று 100 சதவீதம் நான் நம்புகிறேன்.

கேள்வி: மாணவர் சங்கத்திற்கும் கலவரத்திற்கும் ஏதும் தொடர்புண்டா?

தாயாரின் பதில்: மாணவர் சங்கத்தினர் 4 நாட்களாக எங்களுடன் அமைதியாக போராடியவர்கள். பள்ளி நிர்வாகமே திட்டமிட்டு சாட்சியங்களை அழிப்பதற்காக முன்னேற்பாடுடன் நடத்தியதே அந்த கலவரம்.

மாணவியின் தாய் எழுப்பிய சந்தேகங்கள்:

1. இறந்த எனது மகள் கைகளை இறுக்கமாக மூடியிருந்தாள். மாடியில் இருந்து தற்கொலைக்கு முயலும்போது கைகளை விரிக்கத்தானே செய்வார்கள். இது எப்படி சாத்தியம்?

2. மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த என் மகளின் ரத்தக்கறைகள் அந்த கட்டிடத்தின் சில பகுதிகளில் எப்படி வந்தது?

3. தற்கொலைக் கடிதம் என்று ஒன்றை காண்பித்தார்களே! அது எனது மகளின் கையெழுத்தே அல்ல! அது திட்டமிட்டு யோசித்து யோசித்து எழுதப்பட்ட கடிதம்.

4. ஆசிரியர்கள் தந்த அழுத்தத்தால் அவள் தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது பற்றி முன்னரே ஒரு வார்த்தை கூட என் மகள் என்னிடம் கூறவில்லையே?

5. பள்ளியின் நுழைவுவாயில் முதல் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் பள்ளி அது. ஆனால் என் மகள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அந்த பதிவு எங்கே போனது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com