தமிழ்நாட்டில், நகரத்தார் வீடுகள் யாவும் இன்றளவிலும் உலகளவில் பேசப்பட்டு வருவதற்குக் காரணம், அவர்களின் வீட்டின் கட்டமைப்பும் அவர்களின் வாழ்க்கை முறையும். இவர்களில் பெரும்பாலானோர் மதுரையிலிருந்து புதுக்கோட்டை வரை தங்களது பூர்வீகத்தை கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் என்ன?.. என்பதை பற்றி பார்க்கலாம்.
திரைப்படங்களில் இன்று அரண்மனை போன்று பிரமாண்டமாக காட்சி அளிக்கும் வீடுகள் பெரும்பாலும் பள்ளத்தூர், கானாடுகாத்தான் போன்ற கிராமங்களில் இருக்கும் நகரத்தார்களின் வீடுகளில் படமாக்கப்பட்டவைதான். இத்தகைய வீடுகளில் பலமுகப்புகள், தாவாரங்கள், அறைகள் மட்டுமல்லாது, பெல்ஜியம் கண்ணாடி, தேக்கால் ஆன நிலைகள் அதில் பல வேலைப்பாட்டுடன் கூடிய சிலைகளை இப்படி பலவற்றைப் பார்க்கலாம். இவர்கள் ஏன் தென் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு சில காரணங்கள் உண்டு.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் சமுதாயமானது வணிகத்தை தொழிலாகக்கொண்டு பூம்புகாரில் (சோழ நாடு) வசித்து வந்தனர். பூம்புகார் கடல் சார்ந்த இடமாததால் இவர்களின் பிரத்யேக வியாபாரமானது உப்பாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக வியாபாரத்தை அதிகரித்து தானியங்கள் துணிவகைகள், தங்கம், வைரம் என்று தங்களது தொழிலை அதிகரித்து வந்தனர். அவ்வாறு வணிகத்திற்காக அவர்கள் செல்லும் நாடுகளில் இருக்கும் பிரத்யேக பொருட்களை வாங்கியும் வந்தார்கள். இவ்வாறு இவர்கள் வாணிகத்தில் செழித்து வந்த சமயம், பூம்புகாரில் ஏற்றப்பட்ட ஆழி பேரலையானது இவர்களின் குடியிருப்பை அழித்து இவர்களை நிலைகுலையச்செய்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மக்களுக்கு யாரும் உதவி செய்யாத நிலையில், புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் என்ற பாண்டிய மன்னர், நகரத்தார்களின் வணிகத்தின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகையால், நகரத்தாரை தங்கள் நாட்டில் குடியேறுமாறும் அவ்வாறு குடியேறுபவர்களுக்கு நிலங்களை இலவசமாக கொடுப்பதாக கூறி 76 கிராமங்களை அவர்களுக்கு இலவசமாக அளித்தார். நகரத்தார் சமுதாயத்தினர், பூம்புகாரை விட்டு புதுக்கோட்டை சுற்றி இருக்கும் 76 கிராமங்களில் குடியேறினர். பிறகு தனது வணிகத்தை மீண்டும் பெருக்கி, இன்றளவும் உலகம் வியக்கும்படியாக விளங்குகின்றனர்.
ஆழிப்பேரலையால் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டு தான் இவர்களின் வீடானது இன்றும் தரைப்பகுதியிலிருந்து சுமார் 10 அடிகளுக்கு உயரமாக கட்டப்பட்டிருக்கும், அவர்கள் வைணவர்களா அல்லது சிவதொண்டர்களா என்பதை தெரிந்துக்கொள்ள ஏதுவாக அவர்களின் வீட்டு முகப்பானது பெருமாள் அல்லது நாயன்மார்களிண் உருவங்கள் பதித்த கூரைகளைக் கொண்டிருக்கும். அதேபோல் இவர்கள் வணிகத்தின் ஒருபகுதியை அண்ணசத்திரங்களுக்கும், ஆலய பணிகளுக்கும் அர்ப்பணித்து வந்தனர். பாதசாரிகள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கென்று இவர்களின் வீடுகளில் பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டு கட்டுமாணங்கள் சுண்ணாம்பு, முட்டைகள், தாமரை இலைகள் கொண்ட பிரத்யேக கலவைகளைக்கொண்டு கட்டப்பட்டிருப்பதால், இயற்கையிலேயே குளிர்சியைக்கொண்டிருக்கும், இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் நகரத்தார்களின் வீடாகட்டும் வாழ்க்கை முறையாகட்டும் உணவாகட்டும், திருமணமாகட்டும், விருந்தினரை உபசரிப்பதில் இருக்கும் முறை ஆகட்டும் இன்றளவும் உலகத்தினரின் புருவத்தை உயர்த்ததான் வைக்கிறது.