”ரொம்ப பயந்துட்டேன்; 14 வயசில் HIV டெஸ்ட் எடுத்தேன்!”- ஷிகர் தவான் பகிர்ந்த பகீர் அனுபவம்!

இந்தியாவின் நட்சத்திர இடதுகை பேட்டரான ஷிகர் தவான், அவருடைய 14-15 வயதில் நடந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.
”ரொம்ப பயந்துட்டேன்; 14 வயசில் HIV டெஸ்ட் எடுத்தேன்!”- ஷிகர் தவான் பகிர்ந்த பகீர் அனுபவம்!
Published on

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், அவரின் அபாரமான பேட்டிங் திறமையால் மட்டுமல்லாமல், அவருடைய டான்ஸ் ரீல்ஸ், மீசை மற்றும் டேட்டூ, சிகை அலங்காரங்கள், கேட்ச் பிடித்துவிட்டு தொடையை தட்டுவது, சக வீரர்களை நகைச்சுவையாக வெறுப்பேற்றுவது போன்ற பல்வேறு கலகலப்பான விஷயங்களால் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.

பச்சைக்குத்தி கொள்வதில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். அப்படித்தான் ஷிகர் தவானும் தன்னுடைய உடல்களில் அதிகப்படியான டேட்டூக்களை விரும்பி போட்டுள்ளார். ஆனால், டேட்டூ போட்டுக்கொள்ளும் தன்னுடைய ஆசையால், தன்னுடைய சிறுவயதில் பல குறும்புகளை செய்துள்ளதாகவும், அதனால் என்னென்னவெல்லாம் நடந்தது என்றும் கலகலப்பான விசயத்தை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் ஷிகர் தவன்.

தனியார் செய்தி சேனலுக்கான பேட்டி ஒன்றில் சமீபத்தில் பேசியிருக்கும் ஷிகர் தவன், "எனக்கு அப்போ 14-15 வயசு இருக்கும். டேட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அதிகப்படியான ஆசையால் மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தினருக்கு தெரியாமல் என் முதுகில் பச்சை குத்திக்கொண்டேன். அதை வீட்டிலிருப்பவர்களிடம் இருந்து சுமார் 3 முதல் 4 மாதங்கள் மறைத்து வைத்திருந்தேன். பின்னர் ஒருநாள் என்னுடைய அப்பாவிற்கு நான் டேட்டூ போட்டிருந்த விசயம் தெரியவரவே, போட்டு வெளுவெளுனு வெளுத்துட்டாரு.

அதற்கு பிறகு டேட்டூ குத்தும்போது ஊசி வழியாக மை உடலுக்குள் சென்றுவிடும் என்றும், அதனால் எச்ஐவி போன்ற நோய்கள் வரும் என்பதை எல்லாம் கேள்விபட்டு அதிகமாக பயப்பட ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் பச்சை குத்தினால் இதுவெல்லாம் நடக்குமா, நடக்காதா, டேட்டூ போட்டிக்கொண்டவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் எனக்கு அப்போது தெரியாது. அதனால் நான் எச்ஐவி டெஸ்ட் எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டு போய் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன். அந்த டெஸ்ட்டில் எனக்கு நெகட்டிவ்னு வந்துச்சு” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

மேலும், ”நான் முதுகில் போட்டுக்கொண்ட முதல் டேட்டூவே ஸ்கார்பியோ தான், அது எனக்கு அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதற்கு பிறகு அதை வேறொரு டிசைனாக மாற்றிக்கொண்டேன். அதனைத்தொடர்ந்து என் கையில் சிவனையும், நம்முடைய சிறந்த வில்லாளியான அர்ஜூனையும் பச்சைக்குத்தி கொண்டேன்” என்று தன்னுடைய டேட்டூக்களை பற்றி கூறியுள்ளார்.

சிறந்த ஓபனராக பார்க்கப்படும் ஷிகர் தவான், தற்போது இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவிதமான இந்திய அணியிலும் விளையாடாமல் இருந்துவரும் அவர், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடவிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியில் அவருடைய இருப்பிடம் சார்ந்து செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் தேர்வாளராகவோ அல்லது அணியின் கேப்டனாகவோ இருந்தால் யாரை அணியில் எடுப்பீர்கள், தவானையா? சுப்மன் கில்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷிகர் தவன், "சுப்மன் டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நான் தேர்வாளராக இருந்தால், இந்திய அணியின் தொடர் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு எனக்கு பதிலாக சுப்மனுக்கு தான் வாய்ப்பு கொடுத்திருப்பேன்" என்று கூறினார்.

மேலும், ”எதிர்காலத்தில் நடக்கக்கூடிய எந்த ஒரு 'மேஜிக்கிற்கும்' என்னை தயார்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணியில் தான் மீண்டும் கம்பேக் செய்து விளையாட வேண்டும். எனக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், என்னை நான் அதற்காக தயார்படுத்தவில்லை என்ற வருத்தம் என் மனதுக்குள் எப்போதும் இருக்காது. ஏனென்றால் என் கையில் எது இருக்கிறதோ, அதைச் சிறப்பாக செய்ய விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com