y குரோமோசோம்கள் குறைந்து வருவதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.இதன் மூலம் ஆண் பாலினமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமா? என்ற மிகப்பெரிய கேள்வி உண்டாகியுள்ளது.
கென்ட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின் முடிவுகள், மக்களிடையே மிகப்பெரிய கவலையைத் தூண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் Y குரோமோசோம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இது வருங்காலத்தில் ஆண் பாலினத்தின் ஒட்டுமொத்த அழிவு குறித்த மிகப்பெரிய கேள்வியினை எழுப்பியுள்ளது.
குரோமோசோம்கள் என்பது ஒரு செல் தலைமுறையிலிருந்து அடுத்த செல் தலைமுறைக்கு பரம்பரை தகவல்களை எடுத்துச்செல்வதாகும்.
மனிதர்களில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதன்படி, மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. இதில், 22 ஜோடிகள் ஆட்டோசோம்களின் கீழும், 23 ஆவது மட்டும் வேறுபட்டு அலோசோம் அல்லது செக்ஸ் குரோமோசோம் என்று கூறப்படுகிறது.
இதில், பொதுவாக XX குரோமோசோம்கள் பெண்ணையும், Y குரோமோசோம்கள் ஆணையும் குறிக்கிறது. அதாவது Y குரோமோசோம் ஆண்களின் பாலின நிர்ணயத்தை குறிக்கிறது. இவை SRY மரபணு எனப்படும் தனித்துவமான மரபணுவைக் கொண்டுள்ளது.
எக்ஸ் குரோமோசோம்கள் ஒய் குரோமோசோம்களுடன் சேரும்போது ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இந்த சூழலில், இந்த ஒய் குரோமோசோம்கள் குறைந்து வரும் நிலையில், வருங்காலத்தில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்படுமோ என்ற மிகப்பெரிய கேள்வியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் கூறுகையில்,
கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் y குரோமோசோம்கள் தனது மரபணுப்பொருளை சீராக இழந்து வருகிறது. முதலில், 900-க்கும் மேற்பட்ட மரபணுக்களை கொண்டிருந்தது . ஆனால், தற்போது 55 மரபணுக்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஒய் குரோமோசோம் மற்ற அதே மரபணு கலவையை (மீண்டும் சேர்க்கை) மேற்கொள்ள முடிவதில்லை. இதுவே படிப்படியாக ஒய் குரோமோசோம்களின் சிதைவிற்கு வழிவகுக்கிறது.
இதேபோக்கு தொடர்ந்தால், அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் ஒய் குரோமோசோம் முற்றிலும் மறைந்துவிடும். இது ஆண் பிறப்புகள் மிகவும் அரிதாக, ஆண்களின் அழிவிற்கு காரணாமானதாக அமைய வாய்ப்பு உண்டு.
அதேநேரம் இதுபோன்ற மரபணு மாற்றங்கள் நமது உலகில் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே பல வகையான உயிரினங்களில் இதுபோன்ற மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பொதுவாக இதுபோன்ற மரபணு மாற்றங்கள் நடக்கும் போது புதிய உயிரினங்கள் உருவாகும்.
மோல் வோல்ஸ் எலி மற்றும் ஸ்பைனி எலி வகைகளில் இதுதான் நடந்துள்ளது. இதுவே மனிதர்களில் நடக்க வாய்ப்புள்ளது.எனவே மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.