ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவிவருவதால், இதனை ’உலக சுகாதார அவசர நிலையாக’ உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Mpox, முன்பு குரங்கு பாக்ஸ் என்று அழைக்கப்பட்டது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் ஏற்படும் இந்த நோய் முதன்முதலில் 1970-ஆம் ஆண்டு DRC-ல் மனிதர்களில் கண்டறியப்பட்டது.
இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இவை கோவிட்-19 போலல்லாமல், காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு மிக எளிதாகப் பரவுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் நீண்டநாள் நெருங்கிய தொடர்பில் இருந்தால், பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.
உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல்
தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்)
நிணநீர் கணுக்கள் வீக்கம்
தலைவலி, தசைபிடிப்பு
உடல் சோர்வு
தொண்டை புண் மற்றும் இருமல்
இந்த குரங்கு அம்மை பாதிப்பு என்பது புதிதாக உருவான நோய் இல்லை .இந்த நோய் ஏற்கெனவே மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பகுதிகளில் அதிகம் காணப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதன் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது 2-ஆவது முறையாக அதிகரித்து வருவதால்,குரங்கம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இரண்டாவது முறை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆப்பிரிக்காவின் 13 நாடுகளில் 17000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை வழக்குகளும், 500-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன என ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கம்மையில் புது வடிவிலான இந்த வைரசானது மிக வேகமாக பரவி வரும் நிலையில், காங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா அண்டை நாடுகளுக்கும் பாதிப்பானது பரவியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "இது நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று... ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் இது பரவுவதற்கான சாத்தியம் மிகவும் கவலைக்குரியது. " எனத் தெரிவித்துள்ளார்.