பொதுவாக மழைக்காலங்களில் அதிக அளவில் பரவும் விழி வெண்படல அழற்சி, கடந்த ஒன்றரை வாரங்களில் அதிகமான நபர்களுக்கு கண்டறியப்படுவதாக கண் மருத்துவர்கள் கூறுகிறார்கள். விழி வெண்படல அழற்சி என்றால் என்ன? அறிகுறிகள் என்னென்ன? பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்.
Conjunctivitis எனும் விழி வெண்படல அழற்சி, மழை காலங்களில் வைரஸ்களால் ஏற்படும் பாதிப்பு தற்போது தினசரி கண் மருத்துவரை அணுகும் 20 பேரில் 2 பேருக்காவது கண்டறியப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். கண்கள் சிவத்தல், நீர் வடிதல், வீக்கம், அதிகப்படியான உறுத்தல், விழிப்படலத்தில் உள்ள நரம்பில் லேசான ரத்தத்திட்டு கசிவு போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. மெட்ராஸ் ஐயின் அறிகுறிகளும், வெண்படல அழற்சியின் அறிகுறிகளும் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த நோய், தீவிர பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடியதல்ல என்றாலும், வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி விடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. கொரோனா கால பழக்கவழக்கங்களாகிய, கைகளை முறையாக சோப்பிட்டு கழுவுதலால் கடந்த பல மாதங்களாக இல்லாமல் இருந்த இந்த பாதிப்பு மீண்டும் கண்டறியப்படுவது மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டும் பின்வாங்குவதைக் காட்டுகிறது என்பதும் மருத்துவர்களின் கருத்து.