கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குவைறால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு காரணம் ‘மல்டிப்பிள் மைலோமா’ என்ர நோய்பாதிப்புதான் என்று இன்று பேசியுள்ளார் நடிகை சுஹாசினி. கடந்த 90 நாட்களுக்கு மேலாக சரத்பாபு இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் நடிகை சுஹாசினி பேசியிருந்தார்.
மல்டிபிள் மைலோமா என்பது என்ன பாதிப்பு? இதுபற்றி நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன? அறிவோம் இங்கே…
மல்டிபிள் மைலோமா என்பது ரத்த புற்றுநோயின் பல வகைகளில் ஒன்று. ரத்தப்புற்றுநோய் வகைகளில், பலரையும் தாக்குவதில் இது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
பொதுவாக நம் உடலைக் காக்கும் ஆன்டிபாடிகள் ப்ளாஸ்மா என்ற உடலின் வெள்ளை ரத்த அணுக்களில் இருக்கும். இந்த ப்ளாஸ்மா, உடலின் எலும்பு மஜ்ஜையில் இருக்கும், அதாவது சில எலும்புகளுக்கு இடையே உள்ள ஸ்பான்ச் போன்ற திசுக்களில் காணப்படும்.
மல்டிபிள் மைலோமா ஏற்படுவோருக்கு, பிளாஸ்மா செல்கள் உற்பத்தி திடீரென மோசமான வழியில் பெருகும். இதனால் உடல் இயக்கம் குழப்பமடையும். அஅதீத ப்ரோட்டீனை உற்பத்தி செய்து, எலும்பு மற்றும் ரத்தத்துக்கு அவற்றை உடல் இயக்கம் கொடுக்கும். இதனால் எலும்புகள், சிறுநீரகங்கள் மற்றும் உடலின் திறன் போன்றவை பாதிக்கப்படும். மேற்கொண்டு பல உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும்.
பல உறுப்புகள் ஒரேநேரத்தில் பாதிக்கப்படுவதாலேயே, இவை மல்டிபிள் மைலோமா என சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் 65 – 70 வயதுடையவர்களுத்தான் இப்பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மல்டிபிள் மைலோமா ஏற்பட்டால் உடலில் பல பிரச்னைகள் வரும் என்பதால், இந்த வகை புற்றுநோய்க்கு பல்வேறு அறிகுறிகள் ஏற்படும் (அதாவது அவரவருக்கு ஏற்படும் உறுப்பு பிரச்னைகளை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்). அதேபோல இவ்வகை புற்றுநோய் எந்தவித கட்டிகளையும் உடலில் ஏற்படுத்துவதில்லை என சொல்லப்படுகிறது.
இதுவரை இப்பாதிப்பு ஏற்பட்டவர்களில், அதிகம் பேரை பாதித்தவை என வகைப்படுத்தப்படுவது:
எலும்பு வலி, எலும்பு முறிவு
ரத்தத்தில் கேல்சியம் அளவு அதிகரித்தல். இதனால் உடல் வலி, மலச்சிக்கல், குழப்பம், தீவிர தாகம், அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றம், நீர்ச்சத்து இழப்பு, சிறுநீரக பிரச்னைகள் / செயலிழப்பு, பசியின்மை, அதீத சோர்வு, மயக்கம், தசை வலி போன்றவை வருதல்
உடல் எடை குறைதல், ரத்தச்சோகை, சோர்வு
விரைந்து பல நோய்த்தொற்றுக்கு உள்ளாதல்
மூக்கில் சிராய்ப்பு அல்லது ரத்தக்கசி ஏற்படுதல்
முதுகுத்தண்டுவட சிக்கல்கள்
பேச்சில் சிக்கல்
உடலின் ஒருபக்கம் செயலற்று போவது
இதய பிரச்னை, தலைவலி, பார்வை பிரச்னைகள்
இப்படி பல பிரச்னைகள் ஒருசேர வரும்.
இவ்வகை கேன்சர் செல்கள், குறிப்பிட்ட ஏதேனும் ஒரு எலும்பில் ஏற்பட்டு பிரச்னையை பின் அதிகப்படுத்தும் என்பதால் ஒவ்வொன்றாகவும் அடுத்தடுத்து அறிகுறிகள் தெரியலாம். சிலருக்கு அறிகுறியே ஏற்படாத நிலையும் உள்ளது (அந்த நிலை smouldering myeloma எனப்படும்). அப்படியானவர்கள் உடலில் ப்ரோட்டினின் அளவை பரிசோதிக்கும்போதே பாதிப்பை கண்டறிய முடியும்.
இந்நோய்க்கான காரணம், இதுவரை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் சொல்லும் காரணிகளாக சில சொல்லப்படுகின்றன. அதன்படி
65 வயதுக்கு மேல் இருப்பது
ஆண்களுக்கு (பிற பாலினங்களைவிட இவர்களுக்கு 1.5 மடங்கு அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது)
குடும்ப பின்னணி
ரேடியேஷன், ரசாயனங்களுக்கு அதிகம் உள்ளாவது
க்ரோம்சோமல் சீரற்று இருப்பது
உடல் பருமன்
ஆகியவை ரிஸ்க் ஃபேக்டர்களாக உள்ளன
இதற்கு முழு சிகிச்சை என்ற ஒன்றே இல்லையென்பது சோகம். இருப்பினும் பல வருடங்களுக்கு இந்நோயை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதற்கு மருந்து, மாத்திரைகள், இன்னபிற மருத்துவ வசதிகள், தன்னியக்க ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை (autologous stem cell transplantation), இம்யூனோதெரபி உள்ளிட்ட தெரபிகள் ஆகியவை உதவும்.
தகவல் உதவி: Metropolis, WebMD