75 விலங்குகளிடமிருந்து குரங்கு காய்ச்சல் நோய் பரவுவதால், நீலகிரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகளாக இருக்கின்றன. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம், இந்த வைரஸ் பரவுகிறது. பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி, குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் சுமார் 85 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மையை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவி வருவது கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதற்கு எந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.