தாங்க இயலாத வாகன இரைச்சல் இதயத்திற்கு ஆபத்தாக முடியலாம்! - மருத்துவஆய்வு விடுக்கும் எச்சரிக்கை என்ன?
காதைக்கிழிக்கும் வாகனங்களின் ஒலிகள் நகரங்களில் வாழ்வோர் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்.இவை அப்போதைக்கு எரிச்சலை தந்தாலும் அதன் பின் உடல் நலனுக்கே உலை வைக்கும் மறைமுகமான ஆபத்தும் ஒளிந்திருப்பதாக எச்சரிக்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
இது குறித்து ஆய்வு தெரிவிப்பது என்ன?
இரு சக்கர வாகனங்களும் கார்களும் பேருந்துகளும் ரயில்களும் எழுப்பும் அதீத பேரொலிகள் இதய ரத்த நாள நோய்களை ஏற்படுத்த தூண்டுதலாக அமையும் என்றும் சில நேரங்களில் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும். ஜெர்மனியை சேர்ந்த மெய்ன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் நிஜல் தலைமையிலான பல்வேறு நாட்டு நிபுணர்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு 10 டெசிபல் ஒலி அதிகரிப்பின்போதும் உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளகோளாறுகள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் 3.2% அதிகரிப்பதாக ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கேட்கும் வாகன இரைச்சல் மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இரைச்சல்களை குறைக்க வாகன வேகத்தை குறைப்பது, உரிய தடுப்புகளை வைப்பது, நவீன டயர்களை பயன்படுத்துவது போன்ற யோசனைகளை கையாளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.