கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் இரண்டு வாரத்திற்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 3 மாத ஆண் குழந்தை மற்றும் சவுரிப்பாளையத்தை சேர்ந்த இரண்டரை மாத ஆண் குழந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் உயிரிழந்தது. இதில், மசக்காளிப்பாளையத்தில் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்காநல்லூர் 3 மாத குழந்தை, நிமோனியா காரணமாகவே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அடுத்த சிலமணி நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுரிப்பாளையத்தை சேர்ந்த இரண்டரை மாத ஆண் குழந்தையும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், பெண்டா ரொட்டா (Pentavalent rotavirus vaccine (RVV)) என்றழைக்கப்படும் தடுப்பு மருந்தின் ஒரு குறிப்பிட்ட வகை குழந்தைகளுக்கு போடுவதையும், சொட்டு மருந்தான oral polio vaccine- ம் (OPV) தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில், தடுப்பூசி போடப்பாட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், தடுப்பூசிகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு வாரம் ஆய்வறிக்கை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தடுப்பூசி, சொட்டு மருந்து என வாரம்தோரும் மாறி மாறி போடுவதால் இரண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.