டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியாத் தொற்றினால் வரக்கூடியது. அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகள். சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீயாதான் டைபாய்டு வரக்காரணம். சுத்தமற்ற உணவு மற்றும் குடிநீரினால் பரவக்கூடியது. கைகழுவாமல் சாப்பிடுவதும் இதற்கு முக்கியக் காரணம். இது நாமே நம் கைகளால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்துவது போன்றது.
ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 21.5 லட்சம் பேர் டைபாய்டால் பாதிக்கப்படுகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. டைபாய்டை கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை கொடுத்துவிட்டால் எளிதில் குணமடையலாம். இல்லாவிட்டால் மிகவும் மோசமாகி அடுத்ததடுத்த நிலைக்குக் கொண்டுசென்று உயிரையே எடுத்துவிடும்.
எப்படி பரவுகிறது? எவ்வாறு கண்டறிவது?
அசுத்தமான முறையில் உணவு உட்கொள்ளும்பொழுது உள்ளே செல்லும் சால்மோனெல்லா பாக்டீரியாவானது முதலில் சிறுகுடல் உள்ளே சென்று தற்காலிகமாக ரத்தத்தில் கலக்கிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களால் உடல் முழுவதும் பரவுகிறது. அப்போதுதான் உடலில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும். மேலும் பாக்டீரியா பித்தப்பை, பித்த உறுப்புகள் மற்றும் குடலின் நிணநீர் திசுக்களில் படையெடுத்து எண்ணிக்கையில் பெருகி, உடல் முழுவதும் பயங்கரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை உறுதிசெய்ய ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளை எடுத்து சோதனை செய்யலாம்.
அறிகுறிகள்
சிகிச்சை
சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொல்லக்கூடிய எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் கண்டுபிடிப்பதற்குமுன்பு இறப்பு விகிதம் 20% ஆக இருந்தது. டைபாய்டு அதிகமாகும்போது நிமோனியா, ரத்தப்போக்கு மற்றும் குடல் ஓட்டையாதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு மரணம்வரை கொண்டுசென்றது. இப்போது மருந்துகளால் இறப்பு 1% - 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு மருந்துகள் கொடுத்த 2 நாட்களிலேயே முன்னேற்றம் தெரியும். 7-10 நாட்களுக்குள் உடல்நிலை சரியானது போன்ற நிலை உருவாகும். ஆனால் பாக்டீரியாவின் தாக்கம் 4 வாரங்களுக்கு உடலுக்குள்ளேயே இருக்கும். எனவே பாதுகாப்பாக இருப்பது நல்லது.