மீண்டும் கிளம்பும் Vegan பயம்... வீகன் ஃபாலோ பண்ணும் முன் இதையெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

"RAW VEGAN" என்பது, உணவை சமைக்காமல் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பச்சையாக உண்ணும் உணவு முறையாகும்.
Vegan Diet - Zhanna Samsonova
Vegan Diet - Zhanna Samsonova File image
Published on

ரஷ்யாவைச் சேர்ந்த டிஜிட்டல் இன்ஃப்ளூயென்சர் ஜன்னா சாம்சோனோவா, தனது சமூக வலைதளபக்கங்களில் Raw vegan எனப்படும் பச்சையான காய்கறிகளை சாப்பிடும் வழக்கத்தை ப்ரமோட் செய்து வந்தார். கடந்த 10 வருடங்களாக இந்த டயட்டை பின்பற்றி வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதன் பின்னணியில் அவர் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த Raw vegan உணவுமுறையும், அதில் அவர் செய்த சில தவறுகளுமே முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.

குறிப்பாக இவர் தண்ணீரே குடிக்காமல், தண்ணீர் சத்துள்ள காய்கறிகளை உட்கொண்டே வாழ்ந்ததாக கூறப்படும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உப்பு, எண்ணெய், புரதம் என எல்லாவற்றையுமே தவிர்த்து வந்துள்ளார் அவர்.

Zhanna Samsonova
Zhanna Samsonova

அவரின் இறப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, வீகன் உணவுமுறை - ஜன்னா பின்பற்றிய Raw Vegan உணவுமுறை - அதை எப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது - கவனமாக இருக்க வேண்டியவை என்னென்ன - உடலுக்கு என்னென்ன ஊட்டச்சத்துகள் தேவை என்பது பற்றியெல்லாம் தன் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரிடம் அனுமதி பெற்று, அவர் கூறிய தகவல்களின் மிக முக்கிய அம்சங்கள் இங்கே பகிரப்படுகின்றன.

“ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஜன்னா ஸம்சுனோவா, தனது 39 வயதில் இறந்திருப்பது இணைய உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் கடந்த பத்து வருடங்களாக ‘ரா வீகன்’ உணவு முறையில் இருந்து வந்துள்ளார். வீகன் என்பது முழுக்க முழுக்க செடிகள், மரக்கறி, பழங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை. இந்த உணவு முறையில் பால் மற்றும் பால் பொருட்கள் கூட தவிர்க்கப்படும்.

அதிலும் "ரா வீகன்" என்பது, உணவை சமைக்காமல் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பச்சையாக உண்ணும் உணவு முறையாகும்.
Vegan Diet
Vegan Diet

ஜன்னா, இந்த ரா வீகன் உணவு முறையை தான் பின்பற்றியதுடன் பலருக்கும் எடுத்துரைத்தும் வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில வருடங்களாக பலாபழத்தையும் துரியன் பழத்தையும் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார் அவர்.

ஆரம்பத்தில் இந்த உணவு முறையில் தனது பக்கத்தில் தான் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார் ஜன்னா. இருப்பினும் உடல் சிறிது சிறிதாக மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கத் துவங்கியிருக்கிறார்.

Zhanna Samsonova
Zhanna Samsonova

சமீபத்தில் இலங்கையில் இவரை சந்தித்த அவரது நண்பர்கள் ‘பார்க்க ரொம்பவே மெலிந்து போய் இருக்கிறாய். கால்கள், வயிறு போன்ற இடங்கள் நீர் சுரந்து வீங்கிப் போய் இருக்கிறது. முறையான சிகிச்சை எடு’ என பரிந்துரைத்துள்ளனர். ஆயினும் அவர் செவிமடுக்கவில்லை. அவரது இறப்பிற்கு ‘காலரா போன்ற கடுமையான வயிற்றுப்போக்கு’ காரணமாக இருக்கலாம் என்று அவரது தாய் தற்போது தெரிவித்திருக்கிறார்.

நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. அதற்கடுத்த நிலையில் உடலுக்கு இன்றியமையாத தேவை - கொழுப்பு. அதற்கடுத்த நிலையில் மாவுச்சத்து இருக்கிறது. இவற்றுடன் கால்சியம், விட்டமின் பி12, விட்டமின் டி, மெக்னீசியம் போன்ற நுண் சத்துகளும் அவசியம்.

வீகன் போன்ற உணவு முறைகளில் புரதச்சத்து மற்றும் பி12, கால்சியம் போன்ற சத்துகள் தேவையான அளவு இருப்பதில்லை. இதனால் நாளடைவில் தீவிர புரதச்சத்து குறைபாட்டு நிலை ஏற்படுகிறது.

பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

இதனால் பசியின்மை, சோர்வு, எதிலும் நாட்டமின்மை, உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுதல், வயிறு மற்றும் கால்களில் நீர் சேர்ந்து வீக்கமாக இருத்தல் போன்றவை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் சரியான உணவு உண்ணாமையால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே ஒவ்வொருவரும் தங்களின் உணவில் புரதச்சத்து (பால் மற்றும் பால் பொருட்கள் வழியாகவாவது முறையாகக் கிடைக்க வேண்டும்) கட்டாயம் தேவை என்பதை கட்டாயம் உணர வேண்டும்.

புரதச்சத்து தரும் உணவுகள்

- முட்டை (நாட்டுக் கோழி & லேயர்)

- மாமிசம் (கால்நடைகள்)

- கோழி (ப்ராய்லர் & நாட்டுக் கோழி)

- மீன்

- பால் மற்றும் பால் பொருட்கள் (பன்னீர் , பால், தயிர் , மோர், வெண்ணெய், நெய்)

புரதச்சத்து தரும் உணவுகள்
புரதச்சத்து தரும் உணவுகள்

- பயறு

- கடலை

- பருப்பு

- நட்ஸ்

போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் சைவ உணவாளர்கள், செடி கொடிகள் மரக்கறி உணவுகளோடு பால் மற்றும் பால் பொருட்களையாவது உட்கொள்ள வேண்டும்.

அப்படியில்லாமல் தொடர்ந்து புரதச்சத்து, கொழுப்புச்சத்து குறைபாடுள்ள உணவு முறையில் இருந்தால் பல உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படக்கூடும்” என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

எந்தவொரு உணவுமுறையையும், மருத்துவர் அனுமதியின்றி பின்பற்றக்கூடாது. விளையாட்டு வீரர்கள் பின்பற்றுகிறார்கள், இன்ஃப்ளூயென்சர்கள் பின்பற்றுகிறார்கள், தெரிந்தவர் பின்பற்றுகிறார் என தகவல்களை கேட்டு உங்களுக்கான உணவை எப்போதும் தேர்வு செய்யாதீர்கள்.

Diet plan
Diet plan

ஒவ்வொருவரின் உடலுக்கும் ஒரு தன்மை இருக்கும். சிலருக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே டயட் இருப்பவர்கள் உங்கள் உடலுக்கான உணவுமுறை எது, உணவுகள் என்னென்ன என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து, கேட்டு, அறிந்து அதன் பின் உட்கொள்ளுங்கள்.

ஒருவேளை ஆலோசனையின்றி உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டீர்கள், அதன்பின் அசௌகரியமாக உணர்கின்றீர்கள் என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com