நாள்முழுதும் உடல் எனர்ஜியாக இருக்க அதற்கு நாம் உணவு தருகிறோம். ஊட்டச்சத்துமிக்க உணவுகள் உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும். அதேசமயம் நாம் சாப்பிடும் உணவுகளில் கவனம் செலுத்தாவிட்டால் அதுவே உடல் சோர்வுக்கு வழிவகுத்துவிடும். எனவே சில உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
சர்க்கரை உணவுகள்: சர்க்கரை எனர்ஜி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை உணவை உட்கொண்டவுடன் உடலுக்கு திடீர் எனர்ஜி கிடைத்தாலும், ஏறிய வேகத்தில் எனர்ஜி வேகமாக குறைந்துவிடும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் சர்க்கரை உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் மறக்கவேண்டாம். எனவே சோடா, கேக்ஸ், டோனட்ஸ் போன்ற இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்.
ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட எண்ணெய்: கேக் மிக்ஸ், ரெடிமேட் உணவுகள், க்ரீமர்கள் போன்ற பொருட்கள் கெட்டுபோகாமல் இருக்க இந்த எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட எண்ணெய்களில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இது உடல் சோர்வை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
காபி: இரவில் கண்விழித்து வேலை செய்பவர்கள் தூக்கம்வராமல் இருக்க காபி குடிப்பது வழக்கம். எனினும், அதிக காபி குடித்தல் உடல்சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வு மட்டுமல்ல, நீண்ட நாட்கள் தொடர்ந்து காபி குடிப்பது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.
வறுத்த உணவுகள்: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஃப்ரைடு சிக்கன் மற்றும் சிப்ஸ்களை விரும்பாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இதில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊறவைக்கும். ஆனாலும் இவை ஆரோக்கியமானவைகள் அல்ல.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பர்கர், குளிரூட்டப்பட்ட உணவுகள், உறைந்த இனிப்புகள் போன்ற பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறோம். இந்த உணவுகளில் அதிக கலோரிகள், கொழுப்புகள், சோடியம் நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதற்கு பதிலாக உடலிலுள்ள எனர்ஜி அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பதுதான் உண்மை. சாதாரண நேரங்களைவிட இந்த உணவுகளை உட்கொள்ளும்போது அதிக சோர்வு உண்டாகும்.