உடல்நிலை சரியில்லாதபோது பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகிறது. அதை பெரும்பாலும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். ஆனால் அது நல்லதல்ல. சில அறிகுறிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் அவற்றில் சில தீவிரமான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் அல்லது நாள்பட்ட நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். முக்கியமாக அதிக உடல்நல பிரச்னைகள் மற்றும் நோய்களால் எளிதாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் முதியோர்கள் இதுபோன்ற அறிகுறிகளை தவிர்க்கக்கூடாது.
எனவே அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது நோய்கள் மற்றும் உடல்நலக்குறைபாடுகள் ஆபத்தானதாக மாறுவதற்குள் அதனை தடுக்க உதவும். குறிப்பாக முதியோர்கள் கீழ்க்கண்ட அறிகுறிகளை தவிர்க்கக்கூடாது.
1. மூச்சுத்திணறல்: அசாதாரண மூச்சுத்திணறல் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம். ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது ரத்தம் சுலபமாக பாய்வதில் தடையை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும். மாரடைப்பு நெஞ்சு வலி மட்டும்தான் அறிகுறியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தலைசுற்றல், மார்பில் இறுக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
2. பிறப்புறுப்பு ரத்தப்போக்கு: மாதவிடாய் நின்ற பிறகு பிறப்புறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரியது. உடலுறவின்போது ஏற்படும் ரத்தப்போக்கை தீவிரமானதாக கருதுவதில்லை. ஆனால் அப்படியில்லாமல் பொதுவாகவே ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துவிடவேண்டும். ஏனெனில் அது கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.
3. மலச்சிக்கல்: மலம் கழித்தலுக்கு குடல் இயக்கத்தின் போது கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால், அது திசுக்களை கஷ்டப்படுத்தலாம். இது மூலநோய்க்கு வழிவகுக்கும். எனினும் எப்போதாவது மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் எப்போதும் மலச்சிக்கல் ஏற்படுவது கட்டி வந்ததால் கூட ஏற்பட்டிருக்கலாம்.
4. மார்பக வீக்கம்: இது மார்பக புற்றுநோயின் முக்கிய அறிகுறி. இதனை புறக்கணிக்கக்கூடாது. மார்பகங்களில் கட்டி அல்லது நிறமாற்றம் போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள். உங்கள் மார்பகங்கள் வீங்கி இருப்பது போன்று தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.