ஒவ்வொருவருக்கும் இரவு நல்ல தூக்கம் அவசியம். ஒரு இரவு நன்றாக தூங்காவிட்டால் அது அந்த நாள் முழுவதும் மனம் மற்றும் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நிறைய பேருக்கு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் அந்த நாள் முழுதும் வேலை பாதிக்கப்படும். இன்சோம்னியா அல்லது முறையற்ற வாழ்க்கைமுறையால் பலர் தூக்கமின்மை பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர்.
தினசரி வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த பிரச்னையை சரிசெய்யலாம். சில எண்ணெய் வகைகள் அல்லது சில உணவு பொருட்களை எடுத்துக்கொள்வதன்மூலம் இரவில் நன்றாக தூங்க முடியும். பல நாடுகளில் இரவு தூங்க போகுமுன் நல்ல தூக்கத்தைப் பெற chamomile டீ குடிப்பதை பரிந்துரைக்கின்றனர். அதேபோல் இரவில் தூங்கப்போகும் முன் பால் குடிக்கும் பழக்கத்தை பலர் கொண்டுள்ளனர். ஆனால் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பலரும் தெரிந்திருப்பதில்லை.
1. தூக்க சுழற்சிக்கு உதவும்: பாலிலுள்ள மெலட்டோனின் மற்றும் ட்ரிப்டோபன் போன்றவை நன்றாக தூங்க உதவும். மூளை வெளியிடும் ஹார்மோனான மெலட்டோனின் நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதேபோல், செரடோனின் உற்பத்திக்கு ட்ரிப்டோபன் உதவுகிறது. இதுவும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
2. சீக்கிரம் தூங்க உதவும்: பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களிலுள்ள சில கலவைகள் தூக்கத்தை சீக்கிரம் வரவைக்கும். இவற்றை சாப்பிடும்போது சீக்கிரம் தூக்கம் வந்துவிடும்.
3. ரிலாக்ஸாக உதவும்: படுக்கைக்கு போகும் முன் சூடான பால் குடிப்பது மனதை ரிலக்ஸாக்கி அமைதிப்படுத்தும். அதனால்தான் இரவு தூங்கப் போகும் முன்பு பால் குடித்தால் ரிலாக்ஸ் ஆகி நன்றாக வேகமாக தூங்க முடிகிறது.