மருத்துவ உலகில் புதிய மைல் கல்லாக அமெரிக்காவில் மலக்குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து வியக்கத்தக்க பலனை அளித்து முற்றிலும் குணமாக்கியுள்ளது. கீமோதெரபி, ரேடியேஷன் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றால் மலம், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட உடலியல் செயல்பாடுகளில் பல்வேறு துன்பங்களை புற்றுநோயாளிகள் சந்தித்து வருகின்றனர்.
இதுபோல் இன்னலை சந்தித்து நோயாளிகளுக்கு புற்றுநோய்க்கான புதிய மருந்தை கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் முழுவதுமாக குண்மடைந்ததால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அந்நாட்டில் உள்ள சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தது.
அந்த மருந்தை மலக்குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு 3 வாரங்களுக்கு ஒரு முறை வீதம், தொடர்ந்து 6 மாதங்கள் என கொடுத்து மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் அவர்களின் உடலை பரிசோதித்தபோது, மிகப்பெரிய ஆச்சர்யமாக புற்றுநோய் முற்றிலும் விலகி குணமடைந்திருந்தனர். புற்றுநோயின் அறிகுறியே தெரியாத அளவுக்கு பூரண குணமடைந்துள்ளதாக டாக்டர் லுயிஸ் டயஸ் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக புற்றுநோய் தீர்க்கும் மருந்து என்ற மகிழ்ச்சி என்றாலும், மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறு எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய்க்கு இந்த மருந்து எந்தளவுக்கு தீர்வாக இருக்கும் என்பதை வரையறுக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.