'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பாதிப்புகள் எப்படி இருக்கும்? அறிகுறிகள் என்னென்ன?

வெஸ்ட் நைல் காய்ச்சல் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பிற்கான காரணம், அறிகுறிகள் ஆகியவை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
வெஸ்ட் நைல்
வெஸ்ட் நைல்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: தினேஷ் குகன்

எங்கு உருவானது?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில், தற்போது ‘வெஸ்ட் நைல்’ என்ற வார்த்தை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தும் வார்த்தையாக மாறி உள்ளது. இதற்கான காரணம், கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான்.

கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல், 1937ஆம் ஆண்டு முதல்முறையாக ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கண்டறியப்பட்டது. வெஸ்ட் நைல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் இதனால் முதல்முறையாக பாதிக்கப்பட்டார்.

இதன் காரணமாகவே இந்த காய்ச்சலுக்கு வெஸ்ட் நைல் என பெயர் வந்தது. இதைத்தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பின், உலகின் பல்வேறு நாடுகளில் இந்த காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்தியாவில் எங்கே?

இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, மலப்புரம் பகுதியில் ஆறு வயது சிறுவன், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 2022 ஆம் ஆண்டு, 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும், இதற்கான தடுப்பூசி என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

பொதுவாக இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே, அதற்கான அறிகுறிகள் தென்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வெஸ்ட் நைல்
‘கொரோனாவுக்கு புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால்...’ ஆஸ்ட்ராஜெனகா எடுத்த திடீர் முடிவு!

அறிகுறிகள்

வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொசுக்கள் கடித்து 2 முதல் 14 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு மோசமாக இருக்கும்பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் என்றும், இந்த காய்ச்சல் பாதிப்பு குதிரைகளுக்கும் ஏற்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து வயதினருக்கும், ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சலால் பாதிப்பு ஏற்படும் என்றாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இதர நோயாளிகளுக்கும், இதனால் ஏற்படும் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெஸ்ட் நைல்
Covishield தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சொல்வதென்ன?

எனினும், கொசு கடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால், பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com