சமீபத்திய ஆய்வு ஒன்றில், டைப் 2 நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகள் முன்னதாகவே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
சிகாகோவில் நடந்த அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் வருடாந்திர கூட்டத்தில், வழங்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், வெளியிடப்பட்ட இம்முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் “டைப் 2 நீரிழிவு நோய் அல்லது, நாள்பட்ட சீறுநீரக நோய் என இவை இரண்டாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள், இவற்றால் பாதிக்கப்படாத ஆண்களை காட்டிலும், 28 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதய நோய் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுகின்றனர்” என தெரிவிக்கிறது.
அதேபோல “டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், பாதிக்கப்படாத பெண்களை காட்டிலும், 26 ஆண்டுகளுக்கு முன்பே இதய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றன” என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இதுகுறித்து, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மருத்துவ மாணவியுமான வைஷ்ணவி கிருஷ்ணன், தெரிவிக்கையில், “எங்களது கண்டுபிடிப்புகள் இதய நோய்க்கு வழிவகுக்கும் காரணிகள் என்ன, எந்த வயதில் அவற்றின் தாக்கம் உண்டாகிறது என்பதை விளக்குவதாக அமைகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்காக டைப் 2 நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக நோய் அல்லது இரண்டும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2011 - 2020 வரையிலான காலக்கட்டத்தில் உள்ள தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான சிறுநீரகம் உடையவர்களைவிட நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பே இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அதேப்போல, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்களைவிட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
மேலும், டைப் 2 நீரிழிவு மற்றும் சீறுநீரக பாதிப்பு உடையவர்களில் ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 42 வயதிலும் இதய நோய் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பெண்கள் 26 ஆண்டுகளுக்கு முன்பும், ஆண்கள் 28 ஆண்டுகளுக்கு முன்பும் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் இதழில் வெளியிடப்படவில்லை.