உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் இடுப்பு சதை என எதுவாக இருந்தாலும் அது உடல்நலத்திற்கு நல்லதல்ல. இடுப்பில் கூடுதல் இன்ச் சேர்வது இதய நோய்களை அதிகரிக்கும் அபாயம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்றவற்றில் எப்போதும் சிக்கலை ஏற்படுத்தும். இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் இதயம் பழுதடைதலை 10% அதிகரிக்கும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. இதனால்தான் இடுப்பிலுள்ள சதையை கட்டாயம் குறைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர் நிபுணர்கள்.
சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, மெலிந்த தேகமுடையவர்களுடன் ஒப்பிடுகையில் இடுப்புசதை அதிகமுடையவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 3.21 முறை அதிகமாக இருப்பதாகக் கூறியிருக்கிறது. மேலும் அதிக எடை உள்ளவர்களுக்கு இதய பிரச்னைகள் வரும் அபாயம் 2.65 முறை அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது. Trunk fat என்று சொல்லக்கூடிய உட்புற சதையின் அளவை பொருத்து கார்டியோவாஸ்குலார் பிரச்னைகள் அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறது அந்த ஆய்வு.
இதயம் செயலிழத்தல் என்றால் என்ன?
இதயம் செயலிழத்தல் என்பது நாள்பட்ட மற்றும் குணப்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த நிலை நாளுக்குநாள் மோசமாகும். எனவே இடுப்பு சதையின் அளவை கண்காணித்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம். பொதுவாக இளம்பருவத்தினரின் இடுப்பு அளவானது அவர்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இடுப்பளவை இயற்கையாக சுருக்குவது எப்படி?
இடுப்பளவை குறைக்கவேண்டும் என்றால் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்த்து, புரதம், அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உடற்பயிற்சியும் மிக அவசியம். இடுப்பளவை கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ்:
1. நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்
2. எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கவேண்டும்
3. வாயு, வயிறு உப்புதல் மற்றும் பிற செரிமான பிரச்னைகளை சரிசெய்யவும்
4. உடல் இயக்கம் அவசியம்
5. கார்போஹைட்ரேட்டுகளின் அளவை குறைத்து புரதத்தை எடுத்துக்கொள்ளவும்
6. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
7. பளு தூக்கவும்
8. புகைபிடித்தல் கூடாது
9. மது அருந்துதல் கூடாது
10. மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்யவும்
இதையும் படிக்கலாமே... கொஞ்சம் கொஞ்சமாக இதயம் செயலிழக்கிறதா? வயிற்றில் தெரியும் அறிகுறிகள் - அதை கவனியுங்கள்!