காபி டீக்கு குட் பை சொல்லுங்க! இல்லாவிட்டால்... - எச்சரிக்கும் நிபுணர்

காபி டீக்கு குட் பை சொல்லுங்க! இல்லாவிட்டால்... - எச்சரிக்கும் நிபுணர்
காபி டீக்கு குட் பை சொல்லுங்க! இல்லாவிட்டால்... - எச்சரிக்கும் நிபுணர்
Published on

போதைப்பழக்கம் மட்டும்தான் அடிமையாக்குமா என்றால் இல்லை. நம்மால் தவிர்க்க இயலாத சில பொருட்களும், குணங்களும், உணவுகளும்கூட நம்மை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன என்றுதான் அர்த்தம். அப்படி உலகளவில் பெரும்பாலானோரை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பானங்கள் காபி மற்றும் டீ. காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடிக்காவிட்டால் பெரும்பாலானோருக்கு நாளே தொடங்காது. ஒரு கப் டீ குடித்தால் கண்டிப்பாக எனர்ஜி கிடைக்கும் என்பது உண்மைதான். அதில் சந்தேகமேதுமில்லை. ஆனால் அதுவே நம்மை அடிமையாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். காபி, டீ பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி. காபி, டீக்கு பதிலாக சில பானங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றை எடுத்துக்கொண்டால் எனர்ஜி கிடைப்பதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் அஞ்சலி.

காபி, டீ குடிக்கும்போது கிடைக்கும் எனர்ஜியானது சிகரெட் குடிக்கும்போது கிடைக்கும் எனர்ஜி போலத்தான். ஒருநாளில் இரண்டு கப் டீ அல்லது காபியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்குமேல் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் ஒரு கப் காபியில் 60-70 மி.கி கஃபைன் இருக்கிறது. இதுவே ஒரு கப் டீயில் இதில் பாதியளவு கஃபைன் உள்ளது. குறிப்பிட்ட அளவிற்குமேல் இந்த பானங்களை எடுத்துக்கொள்ளும்போது அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார் அவர்.

உணவின் மூலம் உடலின் செயல்திறன் மற்றும் எனர்ஜி அளவை அதிகரிக்க இரண்டு வழிகள் உள்ளன. எளிய உணவுகள் மற்றும் நொதிகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்கள். மேலும் ஹெர்பல் டீ, க்ரீன் டீ, கொத்துமல்லி மற்றும் புதினா ஜூஸ், தேங்காய் தண்ணீர், ஆரஞ்சு ஜூஸ் போன்ற பானங்கள் நம்மை அடிமையாக்காது. அதேசமயம், இயற்கையான, பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்தவை.

அதேபோல் பச்சையான உணவுகளை எடுத்துக்கொள்வதும் உடலுக்கு எனர்ஜியை கொடுப்பதாகக் கூறுகிறார் அஞ்சலி. மேலும் உடலுக்கு தேவையான குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளவும் ஒவ்வாமை ஏற்படுத்தும் சிலவற்றை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்துகிறார். மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவுகளையும் தவிர்ப்பது நலம் என்கிறார் அவர். சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதீத புரதச்சத்து டயட்டுகள், கஃபைன், நிகோட்டின் மற்றும் ஆல்கஹால் போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நலம் என்கிறார் அஞ்சலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com