குஜராத் | சண்டிபுரா வைரஸ்-க்கு 4 வயது சிறுமி பலி - மேலும் 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

குஜராத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிப்பட்டு 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிபுரா வைரஸ்
சண்டிபுரா வைரஸ்முகநூல்
Published on

சண்டிபுரா வைரஸுக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதல் உயிரிழப்பை குஜராத் அரசு உறுதி செய்துள்ளது. அதாவது, 4 வயது குழந்தை சண்டிபுரா வைரஸுக்கு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் புதுவகையாக நோய்தொற்றுகள் உண்டாகி ஒருவித பதட்டத்தினை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. கொரோனா தொற்று, பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், மூளையை உண்ணும் அமீபா என நாளுக்கு நாள் புதுபுது தொற்றின் வகைகள் உருவாகி மனித குலத்திற்கு தொல்லை கொடுத்து வருகின்றன.

இந்தவகையில், தற்போது சண்டிபுரா என்னும் வைரஸ் பாதிப்பு உருவெடுத்துள்ளது.

குஜராத் மாநிலம், ஆரவல்லி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கிட்டதட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும்பாலும் சண்டிபுரா வைரஸால் தான் நிகழ்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சண்டிபுரா வைரஸால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக, இது தொடர்பாக குஜராத் சுகாதார் அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் கூறுகையில், “சபர்கந்தா மாவட்டம், ஹிமத்நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு குழந்தை அருகில் இருந்த மற்றொரு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 12 மாதிரிகளும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, இவர்கள் சண்டிரா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று உறுதி செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில், இந்த புதுவித வைரஸால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், சண்டிபுரா வைரஸ் தொற்றிற்கு 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து சபர்காந்தா மாவட்ட சுகாதார அலுவலர் (CDHO)ராஜ் சுதரியா கூறுகையில், “சபர்காந்தா மாவட்டத்தின் ஹிமட் நகர் சிவில் மருத்துவமனையில் உயிரிழந்த ஆரவல்லி மாவட்டத்தின் மோட்டா கந்தரியா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சண்டிபுரா வைரஸூக்கு முதல் உயிரிழப்பு இதுதான்’ என்று தெரிவித்தார்.

சண்டிரா வைரஸ் என்றால் என்ன?

வரலாறு சொல்வதென்ன?

முதல் முதலில் இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் உள்ள சண்டியா என்ற கிராமத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.

இவ்வகையான வைரஸ் சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும். இதில், ரேபிஸ் வைரஸும் அடங்கும். மேலும், இந்த தொற்றின் தீவிரம் குறித்து தெரிவித்த குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல், “இந்த நோய் ஒரு வெக்டார் பாதிக்கப்பட்ட ஒருவகையான மணல் பூச்சி கடிப்பதால் ஏற்படுகிறது.

சண்டிபுரா வைரஸ்
மூளை உண்ணும் அமீபா என்றால் என்ன? உயிர்க்கொல்லியாக மாறுவது ஏன்? தப்பிப்பது எப்படி? முழு விவரம்!

குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கும் இவ்வகை தொற்று, 9-14 வயது வரையிலான குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல், வாந்தி, தளர்வான இயக்கம் மற்றும் தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தீவிர நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவாது. இத்தொற்றுக்கென பிரத்யேக சிகிச்சை எதுவும் இல்லை.

அறிகுறிகள்

தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, அடிக்கடி வாந்தி, வலிப்பு, குழப்பம், எரிச்சல், கோமா போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் மரணத்திற்கே வழிவக்கும்.

சண்டிபுரா வைரஸ்
”ரத்த ஓட்டத்தை சீராக்கும்; இதய ஆரோக்கியம்” பீட்ரூட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? A - Z தகவல்கள்!

எவ்வாறு தடுக்கலாம்

  • மணல் ஈக்கள் கடிப்பதால் ஏற்படும் இத்தொற்றை மணல் ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதால் தடுக்கலாம்.

  • மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்.

  • உடலில் நீர் சத்து குறைந்து கடுமையான வாந்தியை ஏற்படுத்துகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் காய்ச்சலை குறைக்கும் ஆண்டிபிரைடிக்ஸ் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

  • மேலும் இது குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

  • சுற்றுச்சூழலை சுகாதார தெளிப்பான்கள் தெளித்து மணல் ஈக்கள் வராமல் தடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com