ரஜினிகாந்த் ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ ஆயத்த முனையம் இணைந்து நடத்தும் 'உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நாள்' நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இன்று உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் என்பதால், அதை முன்னிட்டு விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டார். பின் பேசுகையில், “இன்றைக்கு பக்கவாதம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. ஒன்றரை கோடி பேர் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் 6 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாத நோய் வருபவர்கள், அடுத்த 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒரு தடவை பக்கவாதத்திற்கான ஊசியை செலுத்த 35,000 ரூபாய் வரை செலவு ஆகும். தமிழகம் முழுவதும் பக்கவாத நோய்க்கான மருந்து அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ளது. தலை வலி, பார்வை மங்குதல், உணர்ச்சி மரத்து போதல், கை கால் வலி போன்ற பக்கவாதம் சார்ந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்” என்று கூறினார்.
தொடர்புடைய செய்தி: வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
இந்த கையேட்டை தொடர்ந்து, அமைச்சர் மேற்பார்வையின்கீழ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட 10 விழிப்புணர்வு வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. அவற்றை தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லை. 90% மேல் டெல்டா வைரஸ் பரவல் தான் உள்ளது” என்று கூறினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, ரஜினிகாந்த் உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்; அவரது குடும்பத்தினரும் அவ்வாறே கூறுகின்றனர் என்று கூறினார்