அரசு விழாவை புறக்கணித்து திடீரென வேகமாக கிளம்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு விழாவை புறக்கணித்து திடீரென வேகமாக கிளம்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு விழாவை புறக்கணித்து திடீரென வேகமாக கிளம்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதார துறையின் சார்பில் சென்னை எழும்பூரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் திடீர் புறக்கணிப்பால் செய்வதறியாது அதிகாரிகள் நின்றுவிட்டனர்.

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் H1N1, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் காலை 10 மணி அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில்  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற  மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் பயிற்சி வழங்கப்பட இருந்தது.

இந்த பயிற்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் அங்கிருந்த அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அமைச்சர் தரப்பில், “பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 50 செவிலியர்களை மட்டுமே வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை” என அதிகாரிகளுடன் கோபம் கொண்டு கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளோ இது போன்ற சிறிய அரங்கில் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த முடியும் என தங்களுக்குள் பேசிக் கொண்டதாக தெரிகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் விரைவில் உரிய ஏற்பாடுகளுடன் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com