உங்கள் குழந்தையிடம் இந்த மாறுதல்கள் இருக்கிறதா? மனநல பாதிப்பாக இருக்கலாம்!

உங்கள் குழந்தையிடம் இந்த மாறுதல்கள் இருக்கிறதா? மனநல பாதிப்பாக இருக்கலாம்!
உங்கள் குழந்தையிடம் இந்த மாறுதல்கள் இருக்கிறதா? மனநல பாதிப்பாக இருக்கலாம்!
Published on

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறு வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் கோளாறு இருப்பது பெரும்பாலும் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் மனநல பாதிப்பை எதிர்கொண்டு வளர்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்பு என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் பெரும்பாலும் அவை அலட்சியப்படுத்தப்படுகின்றன எனவும் கூறுகின்றனர் மனநல நிபுணர்கள். குழந்தைகளுக்கு மனநோயை ஏற்படுத்தும் காரணங்கள் என்ன? கண்டறிவது எப்படி? அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகள்? என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் ஏழு பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. குழந்தைகளுக்கு மனநல பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள் நிறைய இருக்கின்றன.

* குடும்பத்தில் அப்பா, அம்மா இடையே ஏற்படும் சண்டை சச்சரவு.
* நிதி நெருக்கடி அல்லது ஏதோவொரு பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பெற்றோர்.
* குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பெற்றோர்.
*கல்வி கற்பதில் உண்டாகும் குறைபாடு.
* மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப் பிராணிகளின் இறப்பு.
* அடிக்கடி ஏற்படும் உடல்நலப் பாதிப்பு.
* பெற்றோரின் தாம்பத்தி உறவை பார்த்துவிடுவது.
* குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை.
* மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்.
* பள்ளியில் அல்லது பள்ளிக்கு வெளியே தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்.

இது போன்ற பல காரணங்களினால் குழந்தைகள் மனநல பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனநல நோய்க்கும் ஆளாகி விடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல சிறார்களும்தான். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறு வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் கோளாறு இருப்பது பெரும்பாலும் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு

குழந்தைகளின் மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி?

தங்களுக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

  • சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு யாருடனும், ஏன் பெற்றோருடன் கூட பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.
  • சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், எரிச்சலாகவும் வெளிக்காட்டுவார்கள்.
  • சாப்பிடுவதற்கு விருப்பப்படாமல் இருப்பார்கள்; வகுப்பறையில் கவனச்சிதறலுடன் இருப்பார்கள்.
  • உற்சாகமிழந்து காணப்படுவார்கள்.

இப்படி நிறைய அறிகுறிகளை வைத்து குழந்தைகளின் மன அழுத்தத்தை கண்டறியலாம். இதை கவனிக்காமலே விட்டுவிட்டால் குழந்தைகளுக்கு DMDD எனப்படும் சீர் குலைக்கும் மனநிலை கோளாறு தாக்கும் அபாயம் அதிகம்.

மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்

முதலில் குழந்தைகள் சொல்வதை புறக்கணிப்பதை நாம் நிறுத்த வேண்டும். குழந்தைகளும், சிறார்களும் அவர்கள் வயதுக்கு உரியவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். எல்லாவற்றையும் சரியாக செய்ய அவர்கள் வளர்ந்த மனிதர்கள் அல்ல. அவர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது எனில் நாம் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். நேர்மறையாக பேசுவது, அதுபோல நடந்துகொள்வதன் மூலம் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க முடியும். வீட்டில் இருப்பதை விட ஒரு குழந்தை பள்ளியில் அதிக நேரம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சியில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குழந்தைகளின் நல்ல மன ஆரோக்கியத்திற்கு பெற்றோர்களுடன் இணைந்து பள்ளிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

'குழந்தை இயல்பான மனநிலையில் இல்லை என்பதை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால் பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம்' என்கிறார் உளவியல் ஆலோசகர் ரித்திகா அகர்வால். ஆதரவான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். 'நான் உன்னை சில நாளாகக் கவனித்து வருகிறேன். நீ இயல்பாக இல்லை' என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com