கோடைகாலம் வந்துவிட்டது! பழங்கள் சீசனும் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவர். வெயிலுக்கு இதமாக இருக்கும் பழங்களை ஜூஸாகவோ, சாலட்டாகவோ ஏதேனும் ஒருவகையில் தினசரி சேர்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக இந்த நீர்ப்பழங்களை தினசரி எடுத்துக்கொள்ள தவறாதீர்கள்!
தர்பூசணி பழம்
இது இந்தியாவில் மிகவும் பிரபலமான கோடைகால பழம் என்றே சொல்லலாம். வெயில்காலத்தில் எங்கு சென்றாலும் சாலையோரங்களில் தர்பூசணி பழங்களை விற்பனை செய்துகொண்டிருப்பர். நீர் சொட்ட சொட்ட, இனிப்பான அந்த பழங்களை வாங்கிச் சாப்பிடும்போது வெயிலின் தாக்கமே அடங்கிவிடும். சுவையான சிவப்புநிற சதைப்பகுதியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் சாப்பிடலாம்.
முலாம்பழம்
இதனை கிர்ணி பழம் என்றும் கூறுவர். இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. வெயில்காலத்தில் இந்த பழ ஜூஸ் இதமான, அதேசமயம் விலை மலிவான ஒன்றும் கூட.
கசாபா முலாம்பழம்
இதனை தேன்பனி முலாம்பழம் என்றும் அழைப்பர். வெளிப்புறம் மஞ்சள் நிறத்திலும், உட்புறம் வெள்ளைநிற சதையையுமுடைய இந்த பழங்கள் அதிகம் திகட்டாதவை. நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாம். புத்துணர்ச்சி தரகூடிய மற்றும் பல்வேறு சத்துகள் நிறைந்த இந்த பழம் கோடைக்கு ஏற்றது.
பாகற்காய்
ஆசியக்கண்டத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய காய் இது. கசப்பாக இருப்பதால் இதை பலரும் விரும்புவதில்லை. ஆனால் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு மருத்துவர்களே பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைப்பதுண்டு. எண்ணற்ற சத்துகள் நிறைந்த பாகற்காய் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.