கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறை வேகமான மாறுதல்களை கண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
உலக சுகாதார தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருந்தகம் ஆகிய திட்டங்கள் நமது குடிமக்களுக்கு நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறை வேகமான மாறுதல்களை கண்டுள்ளது. பல புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது எண்ணற்ற இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றார்.
மேலும் பிரதமர் தனது ட்விட்டர் பதிவுகளில், “ இந்தியாவின் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மருத்துவம் என்பதற்கான நமது நோக்கத்தினால் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் குறிப்பிடத்தக்க சேமிப்பு உறுதியாகிறது. அதே சமயம் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேலும் அதிகப்படுத்த நமது வலைப்பின்னலை நாம் வலுப்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்