சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று, யோங்காங் டெல் என்ற பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, immediate restoration முறையில் ஒரே நாளில், ஷூவாங்கிற்கு 23 பற்கள் பிடுங்கப்பட்டு, 12 பற்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
சிசிச்சைக்குப் பிறகு, ஹூவாங்கிற்கு தொடர்ந்து வலி உணரப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அதற்கென அவருக்கு சிகிச்சை ஏதும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஹூவாங்கின் மகள் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி இடுகை ஒன்றை வெளியிட்டார். இதன் மூலமே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து அச்சிறுமி தெரிவிக்கையில், “இவ்வளவு சீக்கிரம் என் தந்தை எங்களை விட்டுச் செல்வார் என நினைக்கவில்லை. நாங்கள் வாங்கிக்கொடுத்த புதிய காரைக் கூட அவரால் ஓட்டமுடியாமல் போய்விட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சையை root canal சிகிச்சையில், 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மருத்துவர் யுவான் செய்துள்ளார். மேலும் ஒரு பல்லை பொருத்துவதற்கு ₹17,000 வரை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து செப்டம்பர் 3 ஆம் தேதி முனிசிபல் மருத்துவ பியூரோவின் (Health Bureau) அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “பல் சிகிச்சைக்கு செய்யப்பட்டு, 13 நாட்கள் இடைவெளியில் இவர், மரணமடைந்திருக்கிறார். எனவே, இறந்ததற்கான காரணம் குறித்து தற்போது வரை ஆராயப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து, யுனிவர்சல் லவ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தின் இயக்குனர் சியாங் குயோலின் குறித்து தெரிவிக்கையில், “பொதுவாக ஒரே நேரத்தில் பிரித்தெடுக்கூடிய பற்களின் எண்ணிக்கை அதிகபட்சம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பொதுவாக 10 என்று எடுத்துக்கொள்ளாலாம்.
அப்படியிருக்கையில் ஒரே நாளில் 23 பற்கள் என்பது மிகவும் அதிகம். இதற்கென்று போதுமான அனுபவத்துடன் ஒரு மருத்துவமனை மற்றும் மருத்துவர் தேவை. மேலும், சிகிச்சைப்பெறுபவரின் உடல் திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றுள்ளார். ஆகவே இதனாலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்படிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியாகினும், இவரது மரணம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.