தென் தமிழகத்தில் முதன்முறையாக இரு இளம்பெண்களுக்கு திருநம்பிக்கான அறுவைசிகிச்சை செய்துள்ளது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. தங்களின் இந்த முயற்சி குறித்து, மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “தென் தமிழகத்தின் முக்கிய மருத்துவமனையாக கருதப்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுவருகிறது. இந்த சிறப்பு வார்டில், தென் தமிழகத்தில் முதன்முறையாக தற்போது திருநம்பிகளுக்கான அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த இரு பட்டதாரி இளம்பெண்கள் இயல்பில் திருநம்பிகளாக இருந்துவந்த நிலையில், இருவருக்கும் தோற்றத்திலும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அதை செய்து, அவர்களை திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனைபடைத்துள்ளது. அறுவை சிகிச்சை முடிவடைந்து தற்போது இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள திருநம்பி/ திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவில் வரும் நாட்களில் வியாழன்தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் எனவும், இந்த பிரிவில் தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர் எனவும் 10பேர் மூன்றாம் பாலின அறுவைசிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளனர் எனவும் முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் செயற்கை மார்பகம், உறுப்பு பொறுத்துதல், குரல்மாற்றம், லேசர் மூலம் முடி நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ள மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்ட அகச்சுரப்பியல் துறை தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவகுழுவினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
- மணிகண்டபிரபு